திரிபுரா திகைப்பு-பகுதி 2 : பூர்வகுடிகளால் ஆட்சி இழந்த மார்க்சிஸ்ட்

திரிபுராவில் பழங்குடியினரின் வாக்குகளை பெறாமல் ஜெயிக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்தது. அங்கு இடதுசாரிகளின் ரத்த நாளமும் பழங்குடி மக்களின் வாக்கு வங்கிதான்.

திரிபுரா தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சிதான்! சிவப்புக் கோட்டை இப்படி மொத்தமாக காவி மயமாகும் என பலர் எதிர்பார்க்கவில்லை. 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டி, அங்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.

திரிபுராவில் இதை பாஜக எப்படி சாதித்தது? அல்லது, மார்க்சிஸ்ட் இங்கே ஏன் வீழ்ந்தது? பகுதி-2 இங்கே! (பகுதி 1, தனிக் கட்டுரையாக)

இந்தக் கட்டுரையின் பாகம் 1-ஐ படிக்க, இங்கே ‘க்ளிக்’ செய்யவும்.

ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே தனது செயல் திட்டங்களில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். சீனா, வங்கதேசம் நாடுகள் அருகில் இருப்பது ஒரு காரணம்! வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தினர் ஊடுருவல், அந்த மாநிலங்களில் நடைபெறும் கிறிஸ்துவ மதமாற்றம் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். சீரியஸான விஷயங்களாக பார்க்கிறது.

இதற்காகவே கடந்த 2 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தன்னை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணியை அங்கு துரிதமாக செய்தது. 2014 தேர்தலின்போது திரிபுராவில் 60 ஆக இருந்த ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களின் எண்ணிக்கை இப்போது 265 ஆகியிருக்கிறது. ‘தேர்தல் அரசியலில் நாங்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால் சமூக சேவை மூலமாக நாங்கள் மக்களை சென்றடைவோம்.

எங்களுடன் இணைந்த பல குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவைதான். எங்களின் இப்போதைய பணியாளர்களில் பலர் முன்பு மார்க்சிஸ்ட் தொண்டர்களாக இருந்தவர்கள். இங்கு இருக்கிற சாதாரண மக்களுக்கு மார்க்ஸை தெரியாது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்ததால் கம்யூனிஸத்தை பின்பற்ற வேண்டிய அழுத்தம் அவர்களுக்கு இருந்தது. நாங்கள் தேச பக்தி, கலாச்சாரம், வரலாறு குறித்து அவர்களுக்கு கூறியவற்றை புதிதாக உணர்ந்தார்கள். அதன்பிறகே எங்களின் ‘ஷாகா’களுக்கு 20,000 முதல் 30,000 பேர் வரை வர ஆரம்பித்தார்கள்’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர்.

ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட இந்த பின்னணி பணிகளால்தான், சிவப்புக் கோட்டைக்குள் பாஜக தனது கட்டமைப்பை இங்கு துரிதமாக கட்டி எழுப்பியிருக்கிறது. 2013 -ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 1.54 சதவிகிதம்! அப்போது இங்கு போட்டியிட்ட 50 தொகுதிகளிலும் பாஜக டெப்பாசிட் இழந்ததையும் இப்போது சுட்டிக் காட்டியாக வேண்டும்.

திரிபுராவில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 17 அல்லது 18 பக்கங்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் இருக்கிறது. ஒரு பக்கத்தில் 60 வாக்காளர்களின் பெயர் பட்டியல் இருக்கும். இந்த ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பொறுப்பாளரை பாஜக நியமித்திருந்தது. அதாவது, 60 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்! இதற்காகவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 50,000 பேர் தயார் நிலையில் இருந்தனர். இதன் மூலமாக கீழ்மட்டம் வரை வாக்காளர்களை தொடர்பு கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

திரிபுராவில் பாஜக ஆதரவாளர்களை மிஸ்ட் கால் திட்டம் மூலமாக ஒருங்கிணைத்ததும் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. ‘மிஸ்ட் கால் மூலமாக மட்டும் 2 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்தார்கள்’ என்கிறார் தியோதர். மோடி உருவம் பொறித்த பனியன் அணிந்த இளைஞர்களை ரயில்களில் அனுப்பு, பாஜக பிரசார பிரசுரங்களை வினியோகம் செய்ததும் பலனைக் கொடுத்தது. அப்படி போகிற தொண்டர்கள் ரயில் பயணிகளிடம் உட்கார்ந்து அவர்களின் தண்ணீர் பிரச்னை முதல் கேஸ் சிலிண்டர் கிடைப்பது வரை விவாதித்தார்கள்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பிஜன் தார் கூறுகையில், ‘நாங்கள் செய்யாத நிறைய வசதிகளை அவர்கள் வைத்திருந்தார்கள். வெளியிடத்தில் இருந்தும் இங்கிருந்தும் பெரும் கூட்டத்தை திரட்டி பிரசாரத்திற்கு பெருமளவில் பணத்தை பாய்ச்சினர்’ என குற்றம் சாட்டினார்.

திரிபுராவில் பழங்குடியினரின் வாக்குகளை பெறாமல் ஜெயிக்க முடியாது என்பதை ஆரம்பத்திலேயே பாஜக உணர்ந்தது. அங்கு இடதுசாரிகளின் ரத்த நாளமும் பழங்குடி மக்களின் வாக்கு வங்கிதான். எனவேதான் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியுடன் (ஐ.பி.எஃப்.டி) உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது பாஜக. ‘ஐ.பி.எஃப்.டி. பூர்வகுடிகளுக்கான தனி மாநில கோரிக்கையை முன்வைத்து அந்த மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தது. அவர்களின் ஆதரவு எங்களுக்கு பலம். இடதுசாரிகளுக்கு எதிரான அத்தனை சக்திகளையுமே எங்களுக்கு சாதகமாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்’ என்கிறார் பாஜக தலைவர் ஒருவர்.

அதேசமயம், பழங்குடியினர் தனி மாநில கோரிக்கைக்கு பாஜக ஆதரவு இல்லை என்பதையும் பிரசாரத்திலேயே பாஜக தெளிவு படுத்தியிருந்தது. காரணம், அதை ஏற்றிருந்தால், மாநிலத்தின் மெஜாரிட்டியான வங்காளிகள் வாக்கு பாஜக.வுக்கு எதிராக திரும்பியிருக்கும். ஐ.பி.எஃப்.டி. போட்டியிட்ட 9 இடங்களில் 8-ஐ வென்றிருப்பதில் இருந்து அவற்றின் பலம் புரியும்.

பழங்குடியினரின் வாக்குகள் இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சியை மொத்தமாக கைகழுவிட்டதை தேர்தல் முடிவுகள் துல்லியமாக வெளிப்படுத்தின. பழங்குடியினருக்கான 20 தொகுதிகளில் 18 இடங்களுக்கு குறைவாக மார்க்சிஸ்ட் வென்றதாக வரலாறே கிடையாது. ஆனால் இந்த முறை ஜோலைபாரி, மனு ஆகிய 2 இடங்களில்தான் மார்க்சிஸ்ட் ஜெயித்திருக்கிறது. குறிப்பாக இடதுசாரிகளின் கோட்டையான அஷராம்பாரி தொகுதியில் துணை முதல்வரும் பழங்குடியின தலைவருமான அகோர் டெப்பார்மன் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். 1988-ல் திரிபுராவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோதும்கூட அஷராம்பாரியில் மார்க்சிஸ்ட் வரலாற்றில் அதற்கு முன்பு எப்போதும் பெறாத வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருந்தது.

திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 4 கூட்டங்களில் பேசினார். ஒரு சிறு மாநிலத்தில் இத்தனை முறை பிரதமர் தேர்தல் பிரசாரம் செய்ததே புதிதுதான். பிப்ரவரி 8-ம் தேதி தெற்கு திரிபுராவில் சோனமுரா, வடக்கு திரிபுராவில் கைலாஷ்ஷாகர் ஆகிய இடங்களில் மோடி பேசிய கூட்டத்திற்கு சுற்றியுள்ள தொகுதிகளின் மக்கள் பெருமளவில் வந்திருந்தனர். வாக்குப் பதிவு தினமாக பிப்ரவரி 18-க்கு 3 தினங்கள் முன்பு மேலும் இரு கூட்டங்களில் பிரதமர் பேசினார். இவை பாஜக.வின் வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கவே செய்தன.

‘கடந்த 3 ஆண்டுகளில் திரிபுராவுக்கு மத்திய அமைச்சர்கள் 52 முறை வருகை தந்திருக்கிறார்கள். இது பாஜக.வும் மத்திய அரசும் திரிபுரா நலனில் அக்கறை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. எனவே மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவோம்’ என்கிறார் பாஜக.வின் திரிபுரா பொறுப்பாளர் தியோதர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான முகம்மது சலீம் கூறுகையில், ‘பாஜக பல வசதிகளை பெற்றிருந்தது. குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் சமூக ஊடகங்கள் வரை! அதே சமயம் திரிபுராவில் நிறைய பிரச்னைகள் இருப்பதும் உண்மைதான்.வேலை வாய்ப்பின்மை பெரிய பிரச்னை! இது குறித்தெல்லாம் நாங்கள் ஆய்வு செய்வோம்’ என்றார் அவர்.

கால் நூற்றாண்டு கால இடதுசாரிகளின் கோட்டை தகர்ந்ததில், நாடு முழுக்க இடதுசாரிகளுக்கு வருத்தம்! அதே சமயம் வடகிழக்கில் வலுவாக கால் பதித்துவிட்ட உற்சாகம் பாஜக.வுக்கு! சிறிய மாநிலங்கள்தான் என்றாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தில் பாஜக திடமாகவே பயணிக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close