திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. திரிபுராவில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.கவின் மாணிக் சாகா முதலமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த வாரம் இடது முன்னணி அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் படி நேற்று (புதன்கிழமை) இடது முன்னணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்தது. திரிபுராவில் உள்ள மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 46 இடங்களில் இடது முன்னணி, 13 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளரும் மனித உரிமை ஆர்வலருமான புரோஷோத்தியம் ரே பர்மனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 46 இடங்களில் சிபிஎம் 43 இடங்களிலும், மற்ற இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் போட்டியிடும் என இடதுசாரி முன்னணி ஒருங்கிணைப்பாளர் நாராயண் கர் தெரிவித்தார்.
மாணிக் சர்க்கார் போட்டி இல்லை
முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் (74), எதிர்க்கட்சித் துணை தலைவர் பாதல் சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள் பானுலால் சாஹா, சாஹித் சவுத்ரி மற்றும் தபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட 8 சிபிஎம் எம்எல்ஏக்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. முன்னாள் முதல்வர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் மாணிக் சர்க்கார் இந்த தேர்தலில் பேட்டியிடவில்லை. அதே நேரத்தில் 24 புதிய நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இடது முன்னணியில் இரண்டு பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
நாராயண் கர் கூறுகையில், “இந்த தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. பாஜக தலைமையிலான அரசு நாட்டின் அரசியலமைப்பு அமைப்புகளை அழித்துவிட்டது. திரிபுராவில், இடதுசாரி, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் வன்முறை மற்றும் அராஜகத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த போருக்கு அழைப்பு விடுத்தன. எங்கள் அழைப்புக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த தேர்தல் ஜனநாயக ரீதியாக பாஜகவின் முடிவாக இருக்கும், மேலும் அவர்கள் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை உறுதிசெய்யும் என்றார்.
மாணிக் சர்க்கார் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடாதது குறித்து கேட்ட போது, அவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த விருப்பத்தை தெரிவித்ததாக கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இது குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுவுடன் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு நாங்கள் கருத்து தெரிவிப்போம்'' என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/