Tripura Governor Twitter
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னர் வந்த செய்தி கீழே:
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவர், அடல் பிகாரி வாஜ்பாய். கடந்த 1998-ல் 13 நாட்கள், 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். பாஜக.வில் தீவிர இந்துத்வா அல்லாத முகமாக வாஜ்பாய் பார்க்கப்பட்டார். சங் பரிவார் கொள்கைகளின் நேர் எதிரான கட்சிகளுக்கும் வாஜ்பாய் மீது அதிக மரியாதை உண்டு.
கடந்த சில ஆண்டுகளாகவே முதுமை காரணமான உடல் பிரச்னைகளால் வீட்டில் ஓய்வில் இருந்தார் வாஜ்பாய். கடந்த ஜூன் 11-ம் தேதி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில், திரிபுரா மாநில ஆளுநர் டதகட்டா ராய், வாஜ்பாய் இறந்துவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் பதிவிட்ட ட்வீட்
மருத்துவமனையிலிருந்தோ அரசிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அவரது ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை பலரும் ரீட்வீட் செய்தனர்.
இதையடுத்து, ஒரு தொலைக்காட்சி சேனலை பார்த்து தவறாக பதிவிட்டுவிட்டதாக மன்னிப்புக் கோரி ஆளுநர் டதகட்டா ராய் மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.
அதிகாரப்பூர்வ செய்தி வெளியாவதற்கு முன்பே, வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.