அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகரும், அவரைக் கடவுளாக பூஜித்தவருமான தெலுங்கானாவைச் சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது துணைவியார் மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து புஸ்ஸா கிருஷ்ணா மனச்சோர்வடைந்தார்.
Advertisment
கிருஷ்ணாவின் உறவினர் பி விவேக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், "வழக்கம் போல் காலையில் எழுந்தார். எந்த வேறுபாடும் எங்களுக்கு தெரியவில்லை. தேநீர் அருந்தினார். சிறிது நேரத்திலே, மயங்கி தரையில் விழுந்தார்" என்று கூறினார்.
“டொனால்ட் டிரம்பபுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார். சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதை தவித்தார். நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்,”என்றார்.
டிரம்ப் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிருஷ்ணா தனது பேஸ்புக் பக்கத்தில் பல வீடியோக்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். டிரம்ப் மீதான கிருஷ்ணாவின் பக்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அமெரிக்க அதிபர் தனது அதிகாலை கனவில் தோன்றியதாக கிருஷ்ணா தெரிவித்திருந்தார் .
கடந்த ஆண்டு, ரூ .2 லட்சம் செலவில் 6 அடி உயரத்தில் டொனால்டு ட்ரம்ப்புக்கு தனது வீட்டில் சிலை வடித்தார். கடவுளுக்கு எந்த மாதிரியான பூஜைகளை செய்கிறார்களோ அதை அனைத்தையும் நான் கடவுளாக வணங்கும் ட்ரம்புக்கு செய்கிறேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். இது ‘டிரம்ப் கோயில்’ என்று உலகளவில் அறியப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது ஒரு முறை அவரை சந்திக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை உலகளவில் கொண்டு சென்ற பொறுப்பு புஸ்ஸா கிருஷ்ணாவை சேரும் என்று கிராம மக்கள் கிருஷ்ணாவின் இறப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் கடவுளாக நினைத்து பூஜித்த ட்ரம்ப்பை அவர் கடைசி வரை சந்திக்கவில்லை என்ற துக்கமும் கிராம மக்களிடையே நிலவுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil