ஹூஸ்டனில் நடந்த 'ஹவ்டி மோடி' நிகழ்வின் போது தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதில் அளித்திருகிறார்.
Advertisment
இதுகுறித்து வட்டமேசை மாநாட்டில் பேசிய இம்ரான் கான், “மதத்துக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை… எந்த மதத்திற்கும் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
"அரசியல் ரீதியாக உணரப்பட்ட அநீதிகள் தான் அவநம்பிக்கையான மக்களை உருவாக்குகின்றன. ஆனால் இப்போது நாம் தீவிர இஸ்லாத்தைப் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இஸ்லாம் என்பது ஒன்று மட்டுமே. நாம் பின்பற்றும் நபிகள் நாயகத்தின் இஸ்லாம். வேறு எந்த இஸ்லாமும் இல்லை," என்று இம்ரான் கான் கூறினார்.
9/11 கடத்தல் சம்பவத்திற்கு முன்னர், 75 சதவீத தற்கொலைத் தாக்குதல்கள் இந்துக்களாக இருந்த தமிழ் புலிகளால் நடத்தப்பட்டதாகவும், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கப்பல்களை வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் பிரதமர் சுட்டிக்காட்டினார். "அப்போது யாரும் தங்கள் மதத்தை குறை கூறவில்லை" என்று இம்ரான் கான் கூறியதாக டான் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி உள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்து வரும் பாகுபாடுகளும் வன்முறைகளும் சமூகங்களின் ஓரங்கட்டலுக்கு வழிவகுத்தன, அவை தீவிரமயமாக்கலுக்கு வழிவகுத்தன என்றும் இம்ரான் கான் கூறினார்.
"கருத்து சுதந்திரம்" என்ற போர்வையில் முஸ்லீம் ஆளுமைகளை "மறுப்பது" குறித்தும் கான் ஆட்சேபனை தெரிவித்தார்.
"இஸ்லாம் மீதான உணர்வுகள் மற்றும் முஹம்மது நபி மீதான மரியாதை ஆகியவற்றை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார்.