ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளபோதிலும், முந்தைய தெலுங்கு தேசம் கட்சியில் பணியமர்த்தப்பட்ட திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவிப்பதால், புதிய அதிகாரிகளை நியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், உலகிலேயே அதிக நிதி வசூலிக்கும் கோயிலாக உள்ளது. ஆண்டு ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரம் கோடி உண்டியல் வசூலாக மட்டும் கிடைக்கிறது. நாளொன்றிற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். பண்டிகை நாட்களில், பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல், ஏழுமலையானை தரிசிப்பதற்காக, கோயில் போர்டு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேவஸ்தான போர்டில், தலைவர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆந்திராவில், எந்த கட்சி ஆளுங்கட்சியோ, அது சார்ந்த உறுப்பினர்களே, திருப்பதி தேவஸ்தான் போர்டின் அதிகாரிகள் ஆகமுடியும்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைந்ததும், கர்நாடகாவிலிருந்து நியமிக்கப்பட்ட சுதா நாராயணமூர்த்தி, தமிழகத்திலிருந்து நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தேவஸ்தான போர்டு தலைவர் புட்டா சுதாகர் யாதவ், மற்ற உறுப்பினர்களான சிவாஜி, ராமகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யாவிட்டால், தேவஸ்தான போர்டை கலைக்கவேண்டிய நிலைக்கு உள்ளாக நேரிடும் என்று அறநிலையத்துறை அமைச்சர் வேலம்பள்ளி ஸ்ரீநிவாஸ் எச்சரித்துள்ளார்.