Advertisment

துருக்கி நிலநடுக்கம்; 80 மணி நேரம் கழித்து ஜூலியின் உதவியுடன் 6 வயது குழந்தையை மீட்ட NDRF

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகியில் நிறுத்தப்பட்ட, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு, இது ஒரு "அதிசயம்".

author-image
WebDesk
New Update
Turkey earthquake

நூர்டகி நகரில் மீட்கப்பட்ட சிறுமி..

தீப்திமென் திவாரி

Advertisment

இரவு பகல் முழுவதும், அவர்கள் பனிக் காற்றில் வேலை செய்தனர், கான்கிரீட் அடுக்குகளில் துளையிட்டனர் - இறந்தவர்களைக் கண்டுபிடிக்க மட்டுமே. இரண்டாவது நாள் காலையில், அவர்களின் நாய் ஜூலி குரைத்து, மூன்று மாடி கட்டிடத்தின் இடிபாடுகளை நோக்கி பாய்ந்தது. மீட்புக் குழுவினர் பின்தொடர்ந்தனர். சுமார் மூன்று மணி நேரம் கழித்து, "இங்கே ஒரு குழந்தை உயிருடன் இருக்கிறது" என்று ஒரு கூக்குரல் ஒலித்தது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகியில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு, இது ஒரு "அதிசயம்".

”ஆறு வயது சிறுமியை இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்து உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார், அவர்கள் அவளை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்... நிலநடுக்கம் ஏற்பட்டு 80 மணிநேரம் ஆகியிருந்தது. பிப்ரவரி 7 அன்று நாங்கள் தரையிறங்கியதில் இருந்து, நாங்கள் தொடர்ந்து வேலையில் இருந்தோம், இறந்தவர்களைத் தவிர வேறு எதையும் கண்டுபிடிக்கவில்லை… ஆனால், நாங்கள் ஒரு அதிசயத்தைக் கண்டோம்,” என்று துருக்கியில் உள்ள NDRF குழுவின் தலைவரான கமாண்டன்ட் குர்மிந்தர் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது நூர்தாகி - இங்கு கிட்டத்தட்ட 600 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.

கமாண்டன்ட் சிங் கூறுகையில், உயிர்களைக் காப்பாற்றும் சவாலும் உள்ளூர்வாசிகளின் அரவணைப்பும்தான் எங்கள் குழுவை தொடர வைக்கிறது.

“இடிபாடுகள் உள்ள இடங்களில், திறந்த வெளியில் கடும் குளிரில், எங்களிடம் இருந்து செய்திகளை கேட்க அவர்கள் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். யாரிடமும் பதற்றமோ, கிளர்ச்சியோ இல்லை. நாங்கள் இறந்தவர்களைக் கண்டாலும் கூட, அவர்கள் வந்து எங்களை கட்டிப்பிடித்து, எங்கள் கைகளில் முத்தமிடுகிறார்கள். அவர்கள் எங்களை ‘ஹிந்திஸ்தானி’ என்று அழைக்கிறார்கள். ஆறு வயது குழந்தையின் மீட்பு தான் இதுவரை மகுடம் சூட்டும் தருணம், என்றார்.

சிங்கின் கூற்றுப்படி, காலை 9 மணியளவில் ஜூலியின் குரைப்பால் குழு எச்சரிக்கை ஆனது. பின்னர் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் துளையிடத் தொடங்கினர். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, 75 வயது மூதாட்டியின் உடலைக் கண்டுபிடித்தனர், அவருடைய குடும்பம், இறந்து விட்டாலோ அல்லது உயிரோடு இருந்தாலோ அருகில்தான் இருக்கக்கூடும். ஒரு மணி நேரம் கழித்து, என்.டி.ஆர்.எஃப் சப்-இன்ஸ்பெக்டர் பிந்தாவ் போரியா ஒரு தம்பதியின் உடல்களைக் கண்டுபிடித்தார்.

"பெண்ணின் உடலில் ஏதோ சுருண்ரு இருப்பது போல் தோன்றியது" என்று சிங் கூறினார். "போரியா உடலை நகர்த்தியபோது, ​​​​அவர் ஆறு வயது சிறுமி, அசைவற்று, கண்கள் மூடப்பட்டிருப்பதைக் கண்டார். பரிசோதனையில், அவர் கண் இமைகளின் கீழ் அசைவைக் கண்டறிந்தார். ‘இங்கே ஒரு குழந்தை உயிருடன் இருக்கிறது’ என்று சத்தம் போட்டார்.

அடுத்த நாள், எட்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் துருக்கிய ராணுவ வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 13 வயது சிறுமியை தேசிய பேரிடர் மீட்புப் படை, உயிருடன் வெளியே எடுத்தது. உயிர் பிழைத்த இந்த இருவரைத் தவிர, 28 உடல்களை இடிபாடுகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வெளியே எடுத்துள்ளது.

"இந்த மீட்பின் போது எங்களின் வெற்றிகள் அனைத்தும் நாங்கள் இங்கு கொண்டு வந்த நான்கு நாய்களுக்கு தான். அவர்களுக்கு நன்றி" என்று சிங் கூறினார்.

துருக்கியில் உள்ள இந்திய ராணுவ மீட்புப் படையினரைப் போலவே, தேசிய பேரிடர் மீட்புப் படைக்கும், பல சவால்கள் உள்ளன: வெப்பநிலை -5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் கடுமையான வானிலை முதல் சீர்குலைந்த உள்ளூர் நிர்வாகம் வரை; மொழித் தடை முதல் சோர்வு வரை வேறுபட்ட சிக்கல்கள் உள்ளன.

“இது புத்திசாலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறப்பு வேலை. அதிக உயிர் பிழைத்தவர்களைக் கொண்ட தளங்களில் பணிபுரிய வேண்டும் என்பதே யோசனை. இருப்பினும், முதல் நாளில், நாங்கள் தனியாக இருந்தோம்… மேலும் எங்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு வந்திருந்தால், உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் மிகவும் பயனுள்ளதாக இருந்திருப்பார்,"  என்று சிங் கூறினார்.

ஒரு சில குழு உறுப்பினர்கள் குளிரில் நோய்வாய்ப்பட்டதைத் தவிர, மூன்று இரவுகள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்ததை சிங் சுட்டிக் காட்டினார். “எந்தவொரு மீட்பு நடவடிக்கையிலும் முதல் மூன்று நாட்கள் மிக முக்கியமானவை... பெரும்பாலான உயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்தக் காலக்கட்டத்தில், ஒவ்வொரு மணி நேரமும் மீட்புப் பணிகளுக்காக செலவிடுகிறோம்,'' என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment