விசா பாலாஜி கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஹைதராபாத், சில்குர் பாலாஜி கோயிலில் உள்ள சிவாலயத்தின் கருவறைக்குள் ஆமை தோன்றியிருப்பது, கடவுள்களின் தெய்வீக தலையீடு மூலம் கோவிட்-19 தொற்று நோய்க்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது என்று அர்ச்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கோயில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 19ம் தேதி பக்தர்களின் வழிபாடு நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை, இந்து புராணங்களின்படி விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவரதாரமான ஆமை கருவறைக்குள் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதற்கு முன்தின இரவு, கோயிலில் பூஜைக்குப் பிறகு அந்த இடம் பூட்டப்பட்டிருந்ததால், 10 செ.மீ முதல் 6 செ.மீ வரை உள்ள அந்த ஆமை எந்த குழாய்கல் வழியாகவும் நுழைந்திருக்க முடியாது என்று கோயில் அர்ச்சகர் கூறினார்.
கோயிலில் இருந்து வரும் எந்த அடையாளமும் ஒரு தெய்வீக அடையாளமாகக் கருதப்படுவதாகக் கூறிய அர்ச்சகர், ஆமை பாற்கடலை கடையும் போது அமுதம் கிடைத்ததைக் குறிக்கிறது என்று தெரிவித்தார்.
Indianexpress.com-இடம் பேசிய கோயிலின் தலைமை அர்ச்சகர் சி.எஸ்.ரங்கராஜன், கோயிலுக்கு முன்னால் உள்ள கிணற்றுப் படியில் ஒரு சில ஆமைகள் இருப்பதாகவும், பின்புறத்தில் உள்ள நீர்நிலைகளிலும் ஆமைகள் உள்ளன என்றும் விளக்கினார். மேலும், இது குறித்து பேசிய அவர், “ஆனால், ஒரு ஆமை அனைத்து படிகளையும் ஏறி பூட்டப்பட்ட கருவறைக்குள் நுழைவது தர்க்கரீதியாக சாத்தியமில்லை இந்த நிகழ்வு இன்றைய கோவிட் -19 தொற்றுநோய் பிரச்சினைக்கு ஒரு தீர்வு நெருங்கிவிட்டது என்பதற்கான சுவாமி பாலாஜி காட்டும் சமிக்ஞை என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
இன்று கோவிட்-19 க்கான தடுப்பூசி அல்லது சிகிச்சைக்கான தேடலை பாற்கடலை கடைவதுடன் ஒப்பிட்ட அர்ச்சகர், சிவாலயத்துக்குள் ஆமை தோன்றியதை, பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தை விழுங்கிய அத்தியாயத்துடன் தொடர்புபடுத்தினார். மேலும், அவர் நம்மைப் பாதுகாப்பதற்காக, கொடிய கொரோனா வைரஸ் விரைவில் கடவுளால் விழுங்கப்படும் என்று கூறினார்.
சில்குர் பாலாஜி கோயிலின் அர்ச்சகர்கள், பொருளாதார நெருக்கடி, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான விவசாய நெருக்கடி மற்றும் கடந்த காலங்களில் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய்களுக்கு எதிராக சிறப்பு பூஜைகள் செய்ததைப் போல, இந்த பிப்ரவரி மாதம் முதல் நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வழிபாடு நிறுத்தப்பட்டு கோயில் மூடப்பட்டிருக்கும்போதும், வழக்கம் போல் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.
ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள இந்த பழமையான கோயில் வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பியிருக்கும். அவர்களில் முதன்மையாக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பி விசாவிற்கு காத்திருப்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேற உள் சன்னதியைச் சுற்றி 11 முறை சுற்ற வேண்டும், வேண்டுதல் நிறைவேறிய பிறகு 108 முறை சுற்ற வேண்டும் என்பது இந்த கோயிலில் வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"