இந்தியாவின் சிதைந்த (தவறான) வரைபடத்தை தனது தொழில் பக்கத்தில் பகிர்ந்தது தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கிய ஒரு நாள் கழித்து, உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் ட்விட்டர் இந்தியா எம்.டி மனீஷ் மகேஸ்வரி மற்றும் மற்றொரு நிறுவன அதிகாரிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். திங்கள்கிழமை மாலை பஜ்ரங் தளம் அலுவலக பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் குர்ஜா நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ட்விட்டர் இணையதளத்தில் ‘தொழில்’ பகுதியின் கீழ் ‘ட்வீப் லைஃப்’ பிரிவில் உலகின் வரைபடத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாக வரைப்படம் காட்டியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சர்ச்சை வெடித்தது. சிதைந்த வரைபடத்தில் இந்தியாவில், பெங்களூரு, மும்பை மற்றும் புது தில்லியில் உள்ள ட்விட்டரின் மூன்று அலுவலகங்களுக்கு குறிகளும் இருந்தன.
நெட்டிசன்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பை அடுத்து ட்விட்டர் நிறுவனம் வரைபடத்தை அகற்றியது.
உலக வரைபடத்தில், லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றை இந்திய பகுதிகளாக காட்டவில்லை. இது தற்செயல் நிகழ்வு அல்ல. இந்த செயல் நான் உட்பட இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது ”என்று பஜ்ரங் தளத்தின் மேற்கு உத்திரபிரதேச பொறுப்பாளர் பிரவீன் பாட்டி புகாரில் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஃப்.ஐ.ஆரில் நியூஸ் பார்ட்னர்ஷிப்ஸ் தலைவர் அமிர்தா திரிபாதி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மகேஸ்வரி மற்றும் திரிபாதி மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 505 (2) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 74 (மோசடி நோக்கத்திற்காக வெளியீடு) இன் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
"சிதைந்த வரைபடம்" பிரச்சினையை அரசாங்கம் மிக உயர்ந்த மட்டத்தில் கவனித்து வருவதாகவும், விரைவில் ட்விட்டரிடமிருந்து விளக்கம் கோரி ஒரு அறிவிப்பை வெளியிடும் என்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தவறான வரைபடம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் கருத்தைத் பெற அந்நிறுவனத்திற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைபடத்திலிருந்து வேறுபட்ட ஒரு வரைபடத்தை ட்விட்டர் வெளியிடுவது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில், ட்விட்டரின் தானியங்கி புவி-குறியீடு அம்சம், லேவில் உள்ள ஹால் ஆஃப் ஃபேம் போர் நினைவுச்சின்னத்திலிருந்து ஒரு நேரடி ஒளிபரப்பின் போது, அந்த பகுதியை “ஜம்மு & காஷ்மீர், மக்கள் சீனக் குடியரசு” என காட்டியது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்போது ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது. இருப்பினும், ஒரு மாதத்திற்குப் பிறகு, லடாக் யூனியன் பிரதேசத்திற்கு பதிலாக ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக லேவைக் காட்டியது.
இதற்கிடையில், இந்தியாவில் ட்விட்டர் இனி ஒரு "இடைத்தரகர்" அல்ல, எனவே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79 ன் கீழ் இணைய இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பை வழங்க முடியாது என்று மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று மூத்த அரசாங்க அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil