Kerala: Two RSS workers arrested over SDPI leader’s murder in Alappuzha: சனிக்கிழமை இரவு ஆலப்புழாவில் சோஷியல் டெமாக்ரடிக் ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தொண்டர்களை கேரள போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஆலப்புழா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஜி.ஜெய்தேவ், கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரசாத் மற்றும் ரதீஷ், கொலை செய்யப்பட்டவரின் கிராமமான மண்ணஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் என்றும், கொலைக்குப் பின்னால் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுவதில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்றும் கூறினார்.
கைது செய்யப்பட்டவர் SDPI தலைவரை தாக்கிய ஆசாமிகளுக்கு வாகனத்தை ஏற்பாடு செய்ததாக எஸ்பி கூறினார். கொலையை செய்தவர்கள் உட்பட மேலும் 8 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் எஸ்பி கூறினார்.
மேலும், ஷானின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை காலை கொல்லப்பட்ட பாஜக ஓபிசி மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
ஆலப்புழா நகரில் உள்ள ரஞ்சித்தின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகள், 12 பேர் ஆறு இரு சக்கர வாகனங்களில் அவரது வழித்தடத்தில் நுழைவதைக் காட்டுகிறது. அரசியல் எதிரிகளின் ஹிட் லிஸ்டில் இதுவரை இடம் பெறாத ரஞ்சித் மீதான தாக்குதல் எதிர்பாராதது என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆலப்புழாவில் நடந்த இரண்டு கொலைகளின் பின்னணியில், அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்துமாறு மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டார். வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, பொது மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு ஊர்வலங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து, தற்போது கொலை செய்யப்பட்டுள்ள ரஞ்சித்தின் உடல், ஆலப்புழா ஆராட்டுப்புழாவில் உள்ள அவரது பூர்வீக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான பா.ஜ., குழுவினர், ரஞ்சித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாஜக கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததால், திங்கள்கிழமை மாலை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொல்லப்பட்ட தலைவரின் உடல் தகனம் செய்யப்படும் நேரத்தில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டதாக பா.ஜ.க கூறியது. இது அவரை அவமதிக்கும் செயலாகும், எனவே கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததாக பாஜக தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.