பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை கூடி, காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு நபர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று கடந்த திங்கள்கிழமை ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குழுவில், பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் மற்றும் லோக்சபாவில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவர், இங்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் தேர்தல் ஆணையர்களான அருண் கோயல் மற்றும் அனுப் சந்திர பாண்டே ஆகியோருக்கு மாற்றாக புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பாண்டே, பிப்ரவரி 15 அன்று ஓய்வு பெற்றார். அதே சமயம் அருண் கோயல் மார்ச் 9 அன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பதவியை ராஜினாமா செய்தார். 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார்.
நியமனங்கள் மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காக கடந்த ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் முதன்மையானதாக இருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் படி, சட்ட அமைச்சர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் செயலர் அந்தஸ்தில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் தலைமையிலான தேடல் குழு தேர்வுக் குழுவுக்கு 5 நபர்களை பரிசீலித்து அறிக்கை வழங்கும் .
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து சட்டம் கூறுகையில், "இந்திய அரசாங்கத்தின் செயலர் பதவிக்கு சமமான பதவியை வகிக்கும் அல்லது வகித்த நபர்களாக இருக்க வேண்டும் மற்றும் நேர்மையான நபர்களாகவும், மேலாண்மை மற்றும் தேர்தல்களை நடத்துவதில் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் " என்று கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/pm-led-committee-to-meet-on-march-14-to-select-two-ecs-9208776/
இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்னர், அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமித்தார். முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றனர். இந்நிலையில் இதற்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெறும் வகையில் சட்டம் கொண்டு வந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“