தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு இரண்டு என்கவுன்டர்கள் நடந்தன, இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க:
ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் மோடர்காம் கிராமத்தில் முதல் என்கவுன்டர் நடந்தது, மாலையில், ஃப்ரிசல் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. முதல் என்கவுண்டரில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃப்ரிசலில் ஒரு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது, இது துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்தது. இரண்டு இடங்களிலும், ஒரு வீட்டிற்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மோதல் தீவிரமான நிலையில், தீவிரவாதிகளை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் வீட்டை வெடிக்கச் செய்ய வேண்டியிருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல், வி.கே பிர்டி, “நான்கு (தீவிரவாதிகளின்) உடல்கள் காணப்பட்டன, ஆனால் நடவடிக்கை முடிந்த பிறகு தான் எங்களால் தெளிவுபடுத்த முடியும். தற்போது உள்ளே இருந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது,” என்றார்.
என்கவுன்டர் நடந்த இடத்தின் ட்ரோன் காட்சிகள் நான்கு உடல்களைக் காட்டியது, அவை இன்னும் மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெனரலின் கூற்றுப்படி, என்கவுன்டர் நடந்த இடம் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இல்லை, மாவட்டத்தின் உள் பகுதிகளில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய என்கவுண்டர் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“