கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில், கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள், 6 பேர், பாஜகவில் சேர இருப்பதாகவும், மும்பையில் வைத்து, பாஜகவின் மூத்த நிர்வாகிகளை சந்தித்த தாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின.
குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்
இந்நிலையில், H.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகிய 2 சுயேட்சை எம்எல்ஏக்கள், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, கர்நாடக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த சூழலில், கர்நாடக கூட்டணி அரசுக்கு வாபஸ் பெற்ற சுயேட்சை எம்எல்ஏக்கள் சங்கரும், நாகேசும் செய்தியாளர்களிடம் பேசினார். இன்று மகர சங்கராந்தி என்பதால், இந்த நல்ல நாளில், அரசை மாற்ற விரும்புவதாக இருவரும் கூறியிருக்கின்றனர். திறமையான அரசாங்கத்தை ஏற்படுத்தவே, மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருப்பதாகவும், சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவையில், மொத்தம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 224 ஆகும். பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் 104ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க, 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தைவிட, 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கூடுதலாக உள்ளது. இதனோடு, 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளித்து வந்த நிலையில், தங்கள் ஆதரவை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
குமாரசாமி கருத்து
சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவர் ஆதரவை வாபஸ் பெற்றிருப்பது குறித்து, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து தெரிவித்திருக்கிறார். வெறும், இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றிருப்பதால், ஆட்சி கவிழ்ந்துவிடாது எனக் கூறியிருக்கிறார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து தங்கள் கூட்டணி எம்எல்ஏக்களை வளைக்கப் பார்க்கும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சி தோல்வியை தழுவும் எனக் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.