Two Omicron cases in Karnataka: தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக பெங்களூருக்கு கடந்த மாதம் வந்த 66 வயது மதிக்கத்தக்க தென்னாப்பிரிக்க பிரஜை மற்றும் 46 வயது மதிக்கத்தக்க உள்ளூர் மருத்துவர் (சமீபத்தில் அவர் எங்கேயும் பயணிக்கவில்லை) என இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதி செய்யப்பட்ட முதல் இரண்டு நபர்கள் இவர்கள்.
ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பே இருவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் மிதமான அறிகுறிகளே அவர்களிடம் தென்பட்டுள்ளது. ஆனால் எங்கேயும் பயணம் மேற்கொள்ளாத ஒரு நபரிடம் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பது, பெங்களூரில் மற்ற நபர்களுக்கும் இந்த பிறழ்வு இருக்கும் என்ற அச்சத்தை நிபுணர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
பயண வரலாறு இல்லை என்றால் இந்த சமூகத்தில் ஒமிக்ரான் பரவி இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் பயண வரலாறு குறித்து நாம் மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கர்நாடக அரசால் நடத்தப்படும் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சி. நாகராஜ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
இரண்டு ஒமிக்ரான் வைரஸ் தொற்றுகள் குறித்து பேசும் போது, தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று பெங்களூருக்கு துபாய் வழியாக வந்த நபரின் 24 முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் 240 இரண்டாம் தொடர்பாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் முடிவுகள் வரவில்லை. மருத்துவருடன் தொடர்பில் இருந்து 218 நபர்களில் 3 முதன்மை தொடர்பாளர்களுக்கும் 2 இரண்டாம் தொடர்பாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர், “தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயதுடைய நபர் தென்னாப்பிரிக்காவில் இருந்து நவம்பர் 20ம் தேதி அன்று வந்தார். அவருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை. விமான நிலையத்தில் அவருடைய மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நவம்பர் 23ம் தேதி அன்று அவருக்கு சோதனை முடிவுகள் நெகடிவ் என அவர் நவம்பர் 27ம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பி சென்றுவிட்டார்.
இரண்டாவது நபர் குறித்து சுதாகர் குறிப்பிடும் போது, மருத்துவருக்கு நோய் அறிகுறிகள் இருந்துள்ளது. அவருக்கு கொரோனா பாசிட்டிவ் முடிவு வரவும் நவம்பர் 22ம் தேதி அன்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடைய சி.டி. அளவு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அவருடைய சோதனை மாதிரிகள் நவம்பர் 24ம் தேதி அன்று மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று கூறினார்.
மருத்துவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 5 நபர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டது. இப்போது வரை யாருக்கும் தீவிரமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படவில்லை. அறிகுறிகள் மிகவும் லேசானதாகவே இருந்தன. டெல்டா மாறுபாட்டில் நுரையீரல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நோயாளிகள் சந்தித்தனர். ஆனால் அப்படியான எந்த உடல் நலக் கோளாறும் இவர்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ”மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி தொற்று பரவிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொண்டோம். ஒருவரின் கொரோனா பிறழ்வு மட்டும் சற்று வித்தியாசமாக இருக்க அதனை மரபணு பரிசோதனைக்காக நாங்கள் என்.சி.பி.எஸ். ஆய்வகத்திற்கு அனுப்பினோம்” என்று கூறினார்.
பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா, பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் உள்ளூர் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் அர்த்தம் என்னவென்றால் மற்ற மக்களுக்கும் இது பரவியிருக்க கூடும் என்பதான். சிகிச்சை வழிமுறைகள் முந்தைய மாறுபாடுகளுக்கு எப்படி இருந்ததோ அது தான் பின்பற்றப்படும். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தேவையில்லை. ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பெங்களூருவில் பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறிகள் இருந்தன. ஆனால் அவரின் உடல்நிலை சீராக உள்ளது. எந்த ஆரோக்கிய சீர்கேடுகளும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
குறைவான சி.டி. மதிப்புகளுன் பாசிட்டிவ் முடிவுகளை பெற்ற அனைத்து மாதிரிகளும் மரபணு பரிசோதனை வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முன்பு போல் அல்லாமல் ஒரே வாரத்தில் சோதனை முடிவுகள் கிடைத்துவிடுவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கர்நாடக அரசாங்கத்திற்கான கோவிட் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற பொது சுகாதாரப் பேராசிரியரான டாக்டர் எம் கே சுதர்சன், செவ்வாயன்று நடைபெற்ற நிபுணர்களின் கூட்டத்தில் ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிவது குறித்த “ஹிண்ட்டை” பெற்றதாக குறிப்பிட்டார். “புதிய மாறுபாட்டுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் எங்களிடம் இல்லை. தனி நெறிமுறை எதுவும் இல்லை எனவே டெல்டா மாறுபாட்டிற்கான நெறிமுறை இதிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil