ஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி... 9 பேர் காயம்! தொடரும் தேடுதல் வேட்டை

இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாத தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட தினமான நேற்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இருப்பினும் கடும் பாதுகாப்பையும் மீறி, ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நேற்று (பிப்.10) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ அதிகாரியின் மகள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்த தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

ராணுவ முகாம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.

தீவிரவாத தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி விளக்கம் அளித்தார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுபேதார் மதன்லால் சவுத்ரி, சுபேதார் முகமது அஷ்ரப் மிர் ஆகியோர் வீர மரணம் அடைந்ததாக கூறினார். கர்னர் நிலையிலான அதிகாரி மற்றும் அப்துல் ஹமித், பகதூர் சிங், சுபேதார் சவுத்ரியின் மகள் என 4 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாத தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐந்து பெண்கள், ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் காயமடைந்து உள்ளனர். அதில் இருவரது உடல்நிலை மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் பதுங்கியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் என்று தெரியவில்லை.

தேடுதல் முழுமை அடைந்த பிறகே அந்த விவரம் தெரியவரும். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என ஒருசேர ராணுவமும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close