இரண்டு தீர்ப்புகளும் சொல்லும் செய்தி என்ன?

அவர் கருத்தரித்திருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதால் அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

கண்ணன்

தில்லி நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற நால்வரின் மேல்முறையீட்டு மனுவின் மீது மே 5, 2017 அன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் அவர்களுக்கான மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது. 429 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள தீர்ப்பில் மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்தக் குற்றத்தைக் கண்டித்துள்ள நீதிபதிகள் ”இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கவில்லை என்றால் வேறெந்தக் குற்றத்துக்குமே மரண தண்டனை வழங்க முடியாது” என்று சொல்லியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு வாசிக்கப்படும்போது நீதிமன்ற அறையில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த பெண்ணின் பெற்றோரும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தக்க நீதி கிடைத்திருப்பதாக நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.

இருப்பினும் இந்திய நாட்டில் ஒரு சிறு சதவீதத்தினர் எப்படிப்பட்ட குற்றத்துக்கும் மரண தண்டனை தீர்வாகாது என்று வாதிடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கிலும் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்றே வாதிடுகிறார்கள், எக்காரணத்தைக் கொண்டும் ஒரு அரசு ஒருவரின் மரணத்துக்கு ஏற்பாடு செய்யக் கூடாது என்பதும், மரண தண்டனைக் குற்றத்தைத் தடுப்பதற்கான கருவியாக செயல்படுவதில்லை என்பதும் அவர்களின் வாதம்.

இது போதுமா?

மரண தண்டனை ஆதரவு எதிர்ப்பு ஆகிய இரு நிலைகளைத் தாண்டி இந்தத் தீர்ப்பிலும், இந்தத் தீர்ப்புக்கு பெரும்பான்மைச் சமூகம் எதிர்வினை ஆற்றும் விதத்திலும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதைவிட பாலியல் குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை போதுமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

நிர்பயா வழக்குக்கு முன்னும் அதற்குப் பின்னும் தினம் தினமும் நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிவருகிறார்கள். நாடே உன்னிப்பாக கவனித்த ஒரே ஒரு வழக்கில் மட்டும் ஒப்பீட்டளவில் விரைவாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுவிட்டால் மட்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறைந்துவிடுமா என்ற கேள்வி முக்கியமானது. ஏனென்றால், மும்பையில் பணி நிமித்தம் தனியாகச் சென்ற ஒரு பெண் நிருபர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துவருகின்றன. இவற்றைத் தடுக்க வழக்கு, தண்டனை ஆகியவற்றைத் தாண்டி பல்வேறு சமூக மாற்றங்களுக்கும் பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கும் இந்தியச் சமூகம் கடக்க வேண்டிய பாதை மிக அதிகம். ஒரு மரண தண்டனையின் மூலம் இலக்கை அடைந்துவிட முடியும் என்ற போலியான நம்பிக்கை யாருக்கும் வந்துவிடக் கூடாது.

கிட்டத்தட்ட இதே அளவு கொடுமையான பாலியல் பலாத்கார வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதலில் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானோ. இந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிக்க, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டில்  12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது மும்பை சிறப்பு நீதிமன்றம். அவர்களில் ஒருவர் மரணமடைந்துவிட்டார்.

மீதமுள்ள 11 பேர் தங்களுக்கு வழங்கபட்ட தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவர்களுக்கான தண்டனையை உறுதி செய்துள்ள நீதிமன்றம் அதே வேளையில் இவர்களில் மூவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற மத்தியப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பில்கிஸ் பானோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கொல்லப்படவில்லை என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் அவரது குடுமபத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர் கருத்தரித்திருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதால் அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

கொடூரமான இரண்டு பாலியல் பலாத்கார வழக்குகளில் ஒரு வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் மற்றொன்றில் மரண தண்டனைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதும்  “கூட்டு மனசாட்சி”யைத் திருப்திபடுத்தவே மரண தண்டனைகள் வழங்கப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

×Close
×Close