உபேர், ஓலா உள்ளிட்ட கால் டாக்ஸி சேவை மூலம் நம்முடைய போக்குவரத்து எளிமையாக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், சில சமயங்களில் அந்நிறுவன ஓட்டுநர்கள் நம்மை குறிவைத்து அதிக பணத்தை பறித்துவிடும் சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அதற்கு சமீபத்திய உதாரணமாக, முடுலி என்பவர் உபேர் கால் டாக்ஸி நிறுவன ஓட்டுநரால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதனை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தபின்பே உபேர் நிறுவனம் உதவிக்கு முன்வந்திருக்கிறது.
முடுலி என்பவர் உபேர் நிறுவன கால் டாக்ஸியில் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இவர் உபேர் ஆப்பில் பேடிஎம் பணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்திருந்தார். இந்நிலையில், விமான நிலையத்திற்கு செல்ல தாமதமாகிவிடும் என்ற தவிப்புடன் முடுலி இருந்துள்ளார். அதனைப் பயன்படுத்திக்கொண்ட உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர், விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சுங்க சாவடியில் அவரையே பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். நீண்ட விவாதத்திற்கு பின் முடுலியே அப்பணத்தை செலுத்தியுள்ளார்.
அதன்பின், விமான நிலையத்திற்கு சென்றவுடன், பயண தொகை முழுவதையும் பணமாக செலுத்திவிடுமாறும், பேடிஎம் முறையில் செலுத்திய பணம் உங்களுக்கு 15 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும் அந்த ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால், மொத்த தொகை ரூ.871 முழுவதையும் முடுலி பணமாக செலுத்தியுள்ளார்.
ஆனால், பேடிஎம்-லும் அந்த தொகை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், உபேர் நிறுவனத்தை தொடர்புகொண்டும் பயனில்லை. இதனால், தனக்கு நேர்ந்த சம்பவத்தை முகநூலில் பதிவிட்டார். அந்த பதிவில் உபேர் நிறுவனம் கருத்திட்டது. அதில், “உங்களது செல்பேசி எண்ணை பகிருங்கள், உபேர் ஆப்பில் ‘உதவி’ என்ற பிரிவை தொடர்பு கொள்ளுங்கள்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.