பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் பொது சிவில் சட்டத்தை, அதாவது அனைத்து மத சமூகத்தினருக்கும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களான திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்றவற்றில் பொருந்தக்கூடிய ஒரு சட்டத்தை தற்போதைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வர வாய்ப்பில்லை. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும் பா.ஜ.க.,வின் கருத்தியல் நிகழ்ச்சி நிரலில் பொது சிவில் சட்டம் கடைசியாக உள்ளது.
எவ்வாறாயினும், பா.ஜ.க இந்த பிரச்சினையை அரசியல் உரையாடலில் உயிர்ப்புடன் மற்றும் புதியதாக வைத்திருக்கும் என்று அரசாங்க மற்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: 125 அடியில் அம்பேத்கர் சிலை; ரூ.10 லட்சம் நிதியுதவி: வெகுவான பாராட்டுகளை பெறும் கே.சி.ஆரின், “தலித் மாடல்”
ஜூன் 28 அன்று போபாலில் நடந்த பேரணியில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக பொதுவெளியில் பேசியதைத் தொடர்ந்து, விரைவில் ஒரு சட்டம் இயற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் பா.ஜ.க மற்றும் அரசாங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஒரு சட்டத்தை இயற்ற மிகவும் ஆழமான ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆலோசனை தேவைப்படும், எனவே 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அது நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருக்க, பல பா.ஜ.க தலைவர்கள் பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி சுனில் குமார் சிங் கொண்டு வந்த ‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பொருத்தமான சட்டம்’ என்ற தனிநபர் மசோதா மக்களவையில் பட்டியலிடப்பட்டது. ஆனால், மசோதாக்களை நிறைவேற்ற மக்களவை செயல்படவில்லை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்தது போல், மாநிலங்கள் தாங்களாகவே பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தலாம் என்றும், ஒரு விரிவான சட்டத்திற்கான பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு காத்திருக்கலாம் என்றும் சங் பரிவார் கருதுகிறது. "அடுத்த ஆட்சிக் காலக்கட்டத்தில் இது எடுக்கப்படலாம், ஆனால் மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதே விருப்பம்" என்று சங் பரிவார் வட்டாரம் தெரிவித்தது.
உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல மாநில பா.ஜ.க அரசாங்கங்கள், ஏற்கனவே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளன; உத்தரப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் இன்னும் குறிப்பிடத்தக்க நகர்வுகள் எதையும் செய்யவில்லை.
“மாநில அரசு நியமித்த நிபுணர் குழு அதன் அறிக்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாலும், அது எந்த நேரத்திலும் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாலும், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா அறிமுகப்படுத்தப்படுவதைக் காண கட்சி ஆர்வமாக உள்ளது. அது எவ்வாறு வெளிவருகிறது மற்றும் அதன் தாக்கத்தை நாங்கள் பார்ப்போம்,” என்று ஒரு வட்டாரம் கூறியது. உத்தரகாண்ட் இதை அமல்படுத்தத் தொடங்கியதும், மற்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் இதை பின்பற்றலாம் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களில் உள்ள பலதரப்பட்ட திருமண நடைமுறைகள், பல்வேறு சமூகங்களில் உள்ள பரம்பரைச் சட்டங்கள் மற்றும் சில பிராந்திய நடைமுறைகள் உட்பட பல சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டியதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
“இது சட்டப்பிரிவு 370 அல்லது முத்தலாக் சட்டம் அல்ல, இந்த மசோதாக்களை விரைவாக கொண்டுவரலாம்... ஆனால், பொது சிவில் சட்டம் என்பது சாதிகள் மற்றும் சமூகங்கள் முழுவதும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஒரு சிக்கலான பிரச்சினை. இதற்கு விரிவான ஆலோசனை மற்றும் ஆழமான ஆராய்ச்சி தேவைப்படும். நாட்டின் அளவு மற்றும் அதன் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அந்த செயல்முறையை அவ்வளவு சீக்கிரம் முடிப்பது எளிதல்ல,” என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தைப் போல், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியாது என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறினார். "மேலும், பழங்குடியினர் மத்தியில், கலாச்சார நடைமுறைகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகின்றன. உத்தரகாண்ட் அல்லது ஹிமாச்சல் பழங்குடியினர் சத்தீஸ்கர் பழங்குடியினருடன் ஒப்பிடும்போது மிகவும் மாறுபட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளனர். பின்னர் வடக்கு கிழக்கில் அது முற்றிலும் வேறுபட்டது. ஆனால் இதுதொடர்பான விவாதம் நாட்டில் ஆரம்பித்திருப்பது நல்லது. ஒரு பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற புதிய யோசனைகளை அது உருவாக்கும். பெண்களின் உரிமைகளில் பொதுவான உடன்பாடு இருக்கலாம்,” என்று ஒரு நிர்வாகி கூறினார்.
இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனையை ஏற்கனவே தொடங்கியுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற ஜூன் 14 அன்று பொது அறிவிப்பை வெளியிட்டது, மேலும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்கான அதன் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு ஜூலை 28 உடன் முடிவடைந்தது. பல்வேறு நகரங்களில் ஆலோசனைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
சங்பரிவார் தரப்பிலும் எச்சரிக்கை அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பழங்குடியினர் மத்தியில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த வனவாசி கல்யாண் ஆசிரமம், பழங்குடியினரை சட்டத்தின் வரம்பிற்கு வெளியே வைத்திருக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை வரவேற்றது. பழங்குடியின சமூகங்கள் தங்கள் இட ஒதுக்கீடு மற்றும் அச்சங்கள் ஏதேனும் இருந்தால், சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும், சமூக ஊடக உரையாடல்களால் பாதிக்கப்படக்கூடாது என்றும் வனவாசி கல்யாண் ஆசிரமம் வலியுறுத்தியது.
சட்டப்பிரிவு 371 மற்றும் பட்டியலிடப்பட்ட பகுதிகளைக் கருத்தில் கொண்டு, வடகிழக்கு உள்ளிட்ட பழங்குடியினரை பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க தலைவர் சுஷில் குமார் மோடியின் ஆலோசனையை இந்த அமைப்பு வரவேற்றது. சட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே சுஷில் குமார் மோடி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் துணைத் தலைவர் சத்யேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டியலின பழங்குடியினரை இந்த சட்டத்திலிருந்து விலக்கி வைப்பதில் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷில் குமார் மோடியின் பங்கை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “சட்ட ஆணையத்தை நாட்டின் பல்வேறு பழங்குடியினப் பகுதிகளுக்குச் சென்று, பழங்குடி சமூகத்தின் முக்கிய நபர்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடத்திய பிறகு, அவர்களின் பாரம்பரிய முறையையும், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசு போன்ற விஷயங்களில் அவர்களின் கருத்துக்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள முயலுமாறு கல்யாண் ஆசிரமம் கேட்டுக்கொள்கிறது,” என்று சத்யேந்திர சிங் கூறியிருந்தார்.
உத்தரகாண்டில் உள்ள நிபுணர் குழு கிட்டத்தட்ட தயாராக உள்ள வரைவு பொது சிவில் சட்ட மசோதாவில், அதன் அடிப்படைக் கருப்பொருள் பாலின சமத்துவம், மேலும் இதில் சொத்துரிமையில் மகள்கள் மற்றும் மகன்களுக்கு சம உரிமை, பெற்றோர் இருவருக்கும் சமமான கடமை மற்றும் மதங்களைத் தாண்டி அனைத்து சமூகங்களிலும் தத்தெடுப்பு மற்றும் விவாகரத்துக்கான சமமான அடிப்படைகள் ஆகியவை இருக்கும் என்றும் ஆதாரங்கள் தெரிவித்தன. லிவ்-இன் உறவுகளைத் தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் ஒரு அறிவிப்பை கட்டாயமாக்கும் விதிகளும் இதில் இருக்கும்.
"பொது சிவில் சட்டம் என்பது சமூகங்கள் அல்லது பழங்குடி குழுக்களின் தற்போதைய நடைமுறைகள் அல்லது பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்காது" என்றும் அந்த ஆதாரம் தெளிவுபடுத்தியுள்ளது. “அனைத்து சமூகங்களும் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் தொடர முடியும். பாலின சமத்துவம் மற்றும் பதிவு செயல்முறை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.