யூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கில், அந்த வங்கியின் முன்னால் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்தபோது தனக்கு வேண்டியவர்களுக்குக் கடன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.
யூகோ வங்கியின் தலைமை மேலாண் இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் கவுல். இவர் கடந்த செப் 1, 2010ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 31 வரை போலியான நபர்களுக்குக் கடன் அளித்துள்ளார். இதுபோல் அளித்த கடனில் ரூ.621 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், அருண் கவுல் தனக்கு வேண்டியவர்களுக்கு யூகோ வங்கியில் இருந்து கடன் அளித்துள்ளதாகவும், அந்தக் கடன் வேறு பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்தது. இதனால் கடன் பெற்றவர்களைக் கண்காணிக்காமல் இருந்தது மற்றும் முறைகேடாகக் கடன் அளிக்கப்பட்டதாகவும் அருண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அருண் கவுல் உட்பட ஆடிட்டர்கள் பங்கஜ் ஜெயின், வந்தனா சாரதா மற்றும் 5 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியில் 8 இடங்களிலும், மும்பையில் 2 இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாகவே பஞ்சாம் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேலாக மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடி மீது வழக்கு உள்ளது. இப்போது இதன் வரிசையில், யூகோ வங்கி மீதும் மோசடி வழக்குப் பதிவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குற்றங்களை அறிய, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையும் அனைத்து வங்கிகளிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.