மும்பை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மராட்டி கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மன்னிப்பு கோர வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நாசுக்காக ஒதுங்கிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஷிண்டே அளித்த பேட்டியில், “கவர்னர் கோஷ்யாரியின் கருத்தில் உடன்பாடு இல்லை. அவரின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். மராத்திய மக்களின் கடும் உழைப்பால் மும்பை வளர்ச்சி கண்டது.
எவர் ஒருவரும் மராத்திய மக்களையோ, மும்பையையோ அவமதிக்க முடியாது” என்று ஒதுங்கிக் கொண்டார்.
முன்னதாக கவர்னர் கோஷ்யாரி இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என தாக்கரே வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே, ‘இந்த விளக்கத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கவர்னர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மராத்திய மக்களின் உணர்வுகளை மட்டும் புண்படுத்தவில்லை, இந்துக்களை பிளவுப்படுத்தியுள்ளார்.
இதுபோன்று சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவா அவர் கவர்னராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்? இது சட்டவிரோதம் என்றால், அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “இந்தப் புதிய அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தது என அறிந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் ஷிண்டே அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை மும்பை அந்தேரியில் நடந்த விழாயொன்றில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கலந்துகொண்டு பேசுகையில், குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி இல்லையென்றால் மும்பை நிதி நகரம் இல்லை எனப் பொருள்படும்படி கூறினார்.
இந்தக் கருத்துக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கவர்னருடன் சண்டைப் பிடித்த தாக்கரே, ‘இது கோலாப்புரி செருப்பை காண்பிக்கும் நேரம்’ எனவும் கூறியிருந்தார். இதற்கிடையில் கோஷ்யாரி தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் தாம் மராத்தியர்களை எந்த இடத்திலும் அவமதிக்கவில்லை. குஜராத்தி, ராஜஸ்தானி மக்கள் குறித்து பேசிய கருத்து தவறான அர்த்தத்தில் திரித்துக் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil