மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்ற அடிப்படையில், சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலான அரசு விரைவில் அமைய உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பாரதிய ஜனதா அதற்கடுத்த இடத்தில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், ஆட்சியமைக்க உரிமை கோராததால், அங்கு நவம்பர் 12ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படாததால், அங்கு புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது.
Advertisment
Advertisements
இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல்வர் ஆகவும், காங்கிரசில் இருந்து ஒரு துணை முதல்வர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு துணை முதல்வர் என அங்கு விரைவில் புதிய ஆட்சி அமைய உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், டில்லியில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பினிடையே, புதிய அரசு குறித்து விவாதிக்கவில்லை என்று சரத் பவார் அறிவித்திருந்தபோதிலும், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அங்கு அமைய உள்ளது.
5 ஆண்டுகளுக்கும் ஒரே முதல்வர் : சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் செய்துகொண்டுள்ளதாக கூறப்படும் உடன்பாட்டின்படி, சிவசேனாவிற்கே அதுவும் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கும் அவரே அப்பதவியில் நீடிப்பார்.
மொத்தமுள்ள 42 துறைகளில், 15 துறைகள் சிவசேனாவுக்கு, 14 துறைகள் தேசியவாத காங்கிரசுக்கும், 13 துறைகள் காங்கிரஸ் கட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும். முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவுகான் பெயர் சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.
அவசரம் இல்லை - காங்கிரஸ் : மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில், காங்கிரஸ் கட்சி எப்போதும் அவசரம் காட்டியதில்லை. புதிய அரசில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு தற்போது விடையளிக்க முடியாது.
உத்தவ் தான் முதல்வர் - தேசியவாத காங்கிரஸ் : முதல்வர் பதவிக்கு சுபாஷ் தேசாய், சட்டசபை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்ரே உள்ளிட்டோரின் பெயர்கள் சிவசேனா கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில், உத்தவ் தாக்ரேவுக்கு தான் முதல்வர் பதவி என்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், பாரதிய ஜனதா பங்களிப்பு இல்லாத இந்த புதிய அரசு, எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளர்.