மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக மூன்று கட்சிகளுக்கு இடையே கடந்த 15 நாட்களாக பலகட்டப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த சூழலில் மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், "அனைத்துக் கட்சித் தலைவர்களும் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க வேண்டும் என்பதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நாளை(நவ.23) மூன்று கட்சிகளின் சார்பிலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும். ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆளுநரை எப்போது சந்திப்பது என்பது குறித்து நாளை நாங்கள் முடிவு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனால், நீண்ட நாட்களாக இழுபறியாக நீடித்து வந்த மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற கேள்விக்கு ஏறக்குறைய இறுதியான முடிவு கிடைத்துவிட்டது என்றே கூறலாம்.