scorecardresearch

ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்கள்!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்களை இங்கே காணலாம்.

ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்கள்!

மகாராஷ்டிராவில் சில வாரங்களாக நிலவிவரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வியாழக்கிழமை அழைப்பு விடுத்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. சிறிது நேரத்திலேயே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் வழியாக பொதுமக்களுக்கு உரையாற்றிய உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசின் 31 மாத கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, பாஜக தலைமையிலான அரசாங்கம் மீண்டும் வருவதற்கான களத்தை அமைத்தார்.

“முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் செய்ததெல்லாம் மராத்தி மக்களுக்காகவும் இந்துத்துவாவுக்காகவும்தான் செய்தேன். இன்று, அனைவருக்கும் முன்னிலையில், நான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கிறேன்” என்று அவர் தனது 15 நிமிட உரையில் கூறினார்.

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு மகாராஷ்டிராவிற்கு வெளியே சொகுசு விடுதிகளில் முகாமிட்டிருந்த ஒரு வார, அரசியல் பரபரப்பு நிகழ்வுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவின் ராஜினாமா வந்தது.

  1. சட்டமன்றக் குழுத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அரசியல் நெருக்கடி ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. விரைவில், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கூட்டத்தில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து, ஒரு வாரம் ரிசார்ட் அரசியல் நடந்தது. காணாமல் போன சிவசேனா தலைவர்கள் சூரத், கவுகாத்தி என இப்போது கோவாவில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் முகாமிட்டுள்ளனர்.
  2. அடுத்த நாள், 17 நிமிட வீடியோவில் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறினார். “நான் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், எங்களுடைய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் இருந்து மட்டுமே முதல்வராக வர வேண்டும். முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். நாங்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கிறோம். யாரும் எங்களை விட்டு வெளியேறுவதைப் பார்க்க முடியாது” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
  3. மேலும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அவரது அணியில் இணைந்ததால், அது பின்னர் ‘சிவசேனா பாலாசாகேப்’ அணி என்று அறியப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்று குற்றம் சாட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரினார். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
  4. அந்த வாரத்தின் பிற்பகுதியில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) தலைவர் சரத் பவார் மூன்று மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் ஒன்றாக இருந்து இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியும் என்று மூத்த தலைவர்களுக்கு உறுதியளித்தார்.
  5. தனது கட்சியின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க அவருக்கு அதிகாரம் அளிக்கும் அவருடைய கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு உத்தவ் தாக்கரே தலைமை தாங்கினார். பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை சிவசேனாவைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  6. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாம் தங்களது முதல் செய்தியாளர் சந்திப்பில், மகாராஷ்டிராவில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கருத்தில் கொண்டு தாங்கள் மீண்டும் திரும்பப் போவதில்லை என்று கூறியதுடன், அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கேட்டுக் கொண்டனர். மகாராஷ்டிராவில் சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
  7. மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சகம் 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய பாதுகாப்பு வழங்கியது.
  8. திங்கள்கிழமை, மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீதான நோட்டீஸ்களுக்கு திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அவர்களுக்கு ஜூலை 12ம் தேதி வரை பதில் அனுப்ப உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
  9. புதன்கிழமை மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தை வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டினார்.
  10. உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து புதன்கிழமை மாலை ராஜினாமா செய்வதாக அறிவித்த சில நிமிடங்களில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிவசேனாவின் அதிருப்திப் பிரிவு எம்.எல்.ஏ.க்கள் கோவா வந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Uddhav thackeray maharashtra eknath shinde mva political crisis in 10 points