பீகாரில் கங்கையின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் 200 மீட்டர் நீளம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) இடிந்து விழுந்தது.இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதுவும் நிகழவில்லை.
ககாரியா மாவட்டத்தில் உள்ள அகுவானியை பாகல்பூரில் உள்ள சுல்தாங்கஞ்ச் உடன் இணைக்கும் 3.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தின் கட்டுமானம் 2014 இல் தொடங்கியது.
இது, 2019இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பாலத்தின் கட்டுமான காலக்கெடு நான்கு முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது அது நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை எஸ்பி சிங்லா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1,710 கோடி செலவில் கட்டுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வருடத்தில் பாலத்தின் மேற்கட்டுமானம் அல்லது இறுதி வார்ப்பு இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன், ஏப்ரல் 2022 இல், பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக சுல்தாங்கஞ்ச் முனையிலிருந்து தூண்கள் 4 மற்றும் 6 க்கு இடையில் சுமார் 100 அடி மேற்கட்டுமானம் இடிந்து விழுந்தது.
எனினும், இந்தச் சரிவு குறித்து கட்டுமான நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் விஜய் குமார் சின்ஹா கூறுகையில், “பணியிடப்பட்ட பாலம் எப்படி இப்படி விழுகிறது? இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இந்தக் கட்டுமானம், கங்கையின் மீது வரும் மிகப்பெரிய பாலங்களில் ஒன்றாகும். இது வடக்கு மற்றும் தெற்கு பீகாரை இணைக்க முயல்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“