Advertisment

'புஷ்பக் விமானம், விநாயகர், கௌரவர்கள்- அறிவியலும் மூடநம்பிக்கைகளும்': கேரள சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு!

கேரள சபாநாயகரின் விநாயகர் தொடர்பான பேச்சு மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என பாஜக உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

author-image
WebDesk
New Update
Under Sangh Parivar fire for Ganesh remark Kerala Speaker faces heat from Nair outfit

கேரள சபாநாயகர் ஏ.என். ஷம்சீர்

கேரள சட்டப்பேரவை சபாநாயகரும், சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினருமான ஏ என் ஷம்சீர், இந்துக் கடவுளான விநாயகப் பெருமானைப் பற்றி சமீபத்தில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற சங்க பரிவார அமைப்புகள் அவரை குறிவைத்து பரப்புரையை தொடங்கியுள்ளன.

Advertisment

மேலும், கேரளத்தின் செல்வாக்குமிக்க அமைப்பான நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 2) சபாநாயகரை கண்டித்துள்ளது.

எர்ணாகுளத்தில் உள்ள குன்னத்துநாடு சட்டமன்றத் தொகுதியில் ஜூலை 21-ஆம் தேதி கல்வித் திட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய ஷம்சீர், இன்றைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க கல்வியில் அறிவியலை மேம்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனது பள்ளி நாள்களில், விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் எனப் படித்தோம்.

ஆனால் இப்போது ரைட் சகோதரர்கள் அல்ல, இந்துத்துவ காலத்தில் புஷ்பக் விமானம் இருந்தது என்கிறார்கள். இது சரியான பதில் அல்ல.

பாடப்புத்தகங்களில் அறிவியலுக்குப் பதிலாக தொன்மங்களே விளம்பரப்படுத்தப்படுகின்றன. கருவுறாமை சிகிச்சையின் விளைவாக கௌரவர்கள் (மகாபாரதத்தின்) பிறந்தார்கள் என்று கற்பிக்க ஒரு முயற்சி நடைபெறுகிறது.

மருத்துவ அறிவியலில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஒரு புதிய கண்டுபிடிப்பு. ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி பழங்காலத்திலிருந்தே இருந்தது என்கின்றனர்.

அதற்கு விநாயகரை சாட்சியாக கூறுகின்றனர். அதாவது, மனித உடலும் யானை முகமும் கொண்ட கணபதி என்று கற்பிக்கப்படுகிறது.

அறிவியலுக்கு பதிலாக, இதுபோன்ற கட்டுக்கதைகள் ஊக்குவிக்கப்படுகின்றன,'' என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் ஷம்சீரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பாஜக மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் கேரளா முழுவதும் போராட்டங்களை நடத்தி, அவர் மீது போலீசில் புகார் அளித்தன.

கண்ணூரில் உள்ள தலச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு பாஜக மற்றும் யுவமோர்ச்சா அமைப்பினர் ஏராளமானோர் பேரணியாகச் சென்று அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஷம்சீர் தலச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

பாஜக, திருவனந்தபுரம் நகர காவல்துறையிடம் அளித்த புகாரில், வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டும் முயற்சியில் இந்து மதத்தை "இழிவுபடுத்தும்" கருத்தை ஷம்சீர் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ஷாம்சீர் விநாயகப் பெருமானை அவமதித்ததாக மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர், “இந்து மத சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் சிபிஐ(எம்) அணுகுமுறை கவலைக்குரியது. இந்து விரோத அணுகுமுறை கொண்ட ஒருவர் சபாநாயகர் பதவியில் இருப்பது ஜனநாயக அமைப்புக்கு நல்லதல்ல” என்றார்.

இதற்கிடையில் ஷம்சீருக்கு சி.பி.எம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. சபாநாயகர் எந்த மதத்தையும், நம்பிக்கையையும் அவமதிக்கவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலர் எம்.வி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் விஞ்ஞானிகளுக்கு உரை நிகழ்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. பிளாஸ்டிக் சர்ஜரி கடந்த காலங்களில் இருந்ததாக பிரதமர் கூறியிருந்தார். பிரதமரின் வாதம் அடிப்படையற்றது என ஷம்சீர் குறிப்பிட்டிருந்தார். மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.

இந்த நிலையில், என்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஜி சுகுமாரன் நாயர், “சபாநாயகரின் கருத்து வேதனையானது என்று கூறினார்.

அவர் எழுதிய கடிதத்தில், “சபாநாயகர் தனது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அவரது அறிக்கை மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம்.

ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இப்பிரச்சினையை சிறுமைப்படுத்தியுள்ளனர், இது மிகவும் கண்டனத்திற்குரியது.

நமது நம்பிக்கையைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, அனைத்து என்எஸ்எஸ் ஊழியர்களும் விசுவாசிகளும் விநாயகப் பெருமானாக இருக்கும் அருகிலுள்ள கோயில்களில் காணிக்கை செலுத்த வேண்டும்.

மேலும் நம்பிக்கையைப் பாதுகாக்க சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட வேண்டும். அதேசமயம், ஆத்திரமூட்டும் நடவடிக்கையும் கூடாது” என்றார்.

கடந்த ஆண்டு சட்டசபை சபாநாயகராக ஷம்சீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் ஆதரவாளரான இவர், 2016-ம் ஆண்டு முதல் தலச்சேரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

1971 ஆம் ஆண்டு வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட தலச்சேரியில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் ஷம்சீர்.

இதற்கிடையில், கேரள சபாநாயகர் மீதான தாக்குதலை முடுக்கிவிட்ட என்எஸ்எஸ், "விஞ்ஞானத்தை விட நம்பிக்கை முக்கியமானது" என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரியில் உள்ள கோவிலுக்குச் சென்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஜி சுகுமாரன் நாயர், சபாநாயகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, “இந்துக்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறார்கள். கணேஷுக்கு எதிரான ஷம்சீரின் கருத்துகளுக்குப் பின்னால் இந்துக்கள் மீதான வெறுப்பு இருக்கிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment