Haryana Contractual Sanitation Worker Position Applied: ஹரியானாவில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையால், 2024 ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 2 வரை 39,990 பட்டதாரிகள் மற்றும் 6,112 முதுகலை பட்டதாரிகள் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஹரியானாவில் 46,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம் (HKRN) உடன் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர், என்று மாநில ஏஜென்சியின் தரவு வெளியிட்டுள்ளது.
ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம் என்பது ஹரியானா இளைஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை வழங்கும் மாநில அரசு அமைப்பாகும். ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 2, 2024 வரை, 39,990 பட்டதாரிகள் மற்றும் 6,112 க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம்-மில் துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த பண்க்கு இது மாதச் சம்பளம் சுமார் ரூ. 15,000 வழங்கப்படும். மேலும், ஹரியான மாநில அமைப்பின் தரவுகளின்படி, 12-ம் வகுப்பு வரை முடித்த 1 லட்சத்து 17 ஆயிரத்து 144 பேர்கள் இந்த துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஹரியானாவில் ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம் மூலம் அரசு துறைகள், வாரியங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஒரு ஒப்பந்த துப்புரவு பணிக்கு மாதத்திற்கு சுமார் ரூ. 15,000 சம்பளம் பெறுவார்கள் என்று ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒருவேளை, பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் பணி விவரம் தெரியாமல் தவறுதலாக விண்ணப்பித்துவிட்டார்களா என்று கருதவும் இடமில்லை. ஏனென்றால், வேலை விவரம் பொறுப்புகளை தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதனால், தவறுதலாகப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு சாத்தியமில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பொது இடங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து குப்பைகளை சுத்தம் செய்தல், பெருக்குதல் மற்றும் அகற்றுதல் ஆகிய வேலைகள் என்று விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, விண்ணப்பதாரர்கள் வேலை விவரத்தைப் படித்ததை உறுதிப்படுத்தும் உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். அவர்களின் சொந்த மாவட்டத்தில் மட்டுமே பணியமர்த்தப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திப்படி, துப்புரவுப் பணியாளர்கள் பதவிக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதற்கு காரணம் ஹரியான மாநிலத்தில் நீண்டகாலமாக நிலவும் வேலையின்மை பிரச்னையைக் குறிக்கிறது. சிலர் அரசாங்க வேலை என்ற பதவியில் ஈர்க்கப்பட்டாலும், மற்றவர்கள் வேறு வேலை கிடைக்காததால் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
“வேலை இல்லை. நான் வீட்டில் சும்மா இருந்ததால் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்தேன்” என்று சிர்சாவைச் சேர்ந்த 29 வயதான ரச்சனா தேவி கூறினார். நர்சரி ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்ற அவர், இப்போது ராஜஸ்தானில் வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரச்சனா தேவி 4 வருடங்களாக வேலை இல்லாமல் இருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதே போல, சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் வசிக்கும் துணை செவிலியருக்கு படித்த மனிஷா மற்றும் பி.எட் பட்டம் பெற்ற அவரது கணவர் டேனிஷ் குமார் (31), தாங்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஹரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 16-ம் தேதி காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) வெளியிட்ட தரவு ஹரியானாவில் வேலையின்மை நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறது.
ஹரியானாவின் நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 11.2% ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான 9.5% ஆக இருந்தது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“