ஏ.ஐ.எம்.பி.எல்.பி ஜூலை முதல் வாரத்தில் சட்ட ஆணையத்திடம் கருத்துக்களை சமர்பிக்க, பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க கூட்டம் நடத்துகிறது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் செவ்வாய்க்கிழமை பொது சிவில் சட்டம் குறித்த கருத்துக்களைக் கோரும் சட்ட ஆணையத்தின் பொது நோட்டீசுக்கு அவர்கள் அளித்த பதிலின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) செவ்வாய்கிழமை மாலை பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க தனது முதல் கூட்டங்களில் ஒன்றை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டின் பிற்பகுதியில், தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசும்போது பொது சிவில் சட்டத்துக்கு அழுத்தம் கொடுத்தார்.
இந்த கூட்டத்திற்கும் பிரதமரின் பேச்சுக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்த அகில இந்திய முஸ்லிம் சட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தைக் கோரும் சட்ட ஆணையத்தின் பொது நோட்டீசுக்கு பதிலளிக்க ஏ.ஐ.எம்.பி.எல்.பி தயாராகி வருவதால் கூட்டம் முன்னதாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறினர்.
“இந்த கூட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. பிரதமரின் உரையும் அதே நாளில் தான் நடந்தது. ஜூலை முதல் வாரத்தில் எங்கள் கருத்தை சட்ட ஆணையத்திடம் சமர்ப்பிப்போம்” என்று ஏ.ஐ.எம்.பி.எல்.பி செயற்குழு உறுப்பினர் டாக்டர் காசிம் ரசூல் கூறினார்.
செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில், ஏ.ஐ.எம்.பி.எல்.பி உறுப்பினர்கள் தங்கள் பதிலின் முக்கிய கருத்துகளின் சுருக்கத்தையும் அவர்கள் தொடும் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் விவாதித்தனர்.
“2016-ம் ஆண்டு சட்ட ஆணையத்திடம் ஏற்கனவே ஒருமுறை நாங்கள் எங்கள் கருத்தை முன்வைத்துள்ளோம். மேலும், 2018-ம் ஆண்டில் சட்ட ஆணையம் பதிலளித்து, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு, பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கூறியது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே பணப்பட்டுவாடா செய்யும் சூழ்நிலையை உருவாக்க தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசியல் தந்திரமே தவிர, சமீபத்திய பொது அறிவிப்பு வேறொன்றுமில்லை என்பதுதான் நாங்கள் உணர்கின்றோம். இந்த முறை சட்ட ஆணையம் கருத்து கேட்ட விதமும் தெளிவற்றதாக உள்ளது. 2016-ம் ஆண்டில், சட்ட ஆணையம் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டது, அதற்கு நாங்கள் பதிலளித்தோம்.” என்று ரசூல் கூறினார்.
பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிறுபான்மையினரைத் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். “சொல்லுங்கள், ஒரு வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஒரு சட்டம், மற்றொரு குடும்ப உறுப்பினருக்கு மற்றொரு சட்டம், அந்த வீடு செயல்பட முடியுமா? அரசியலமைப்புச் சட்டமும் பொது சிவில் சட்டம் பற்றி பேசுகிறது.” என்று மோடி செவ்வாய்க்கிழமை கூறினார்.
அப்படியொரு சட்டம் இல்லாததால் குறிப்பாக மோசமாக பாதிக்கப்படுவது பாஸ்மாண்டா (பிற்படுத்தப்பட்ட) முஸ்லிம்கள் தான் என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் பாஸ்மாண்டா முஸ்லிம்களை கவரும் வகையில் பா.ஜ.க தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.
“ஒரு நாடு, ஒரே சட்டம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், நாட்டிற்கு ஒரே சட்டம் என்ற அமைப்பு இந்தியாவில் இல்லை என்பதை நாம் சுட்டிக்காட்டலாம். இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) மற்றும் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் (CRPC) நடைமுறைப்படுத்துவது கூட மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டில் பசுவதைக்கு ஒரே மாதிரியான சட்டம் இல்லை. இது சில மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது, மற்ற வடகிழக்கு மாநிலங்கள், கோவா, வங்காளம் போன்றவை - அத்தகைய சட்டம் கூட இல்லை” என்று ரசூல் பிரதமரின் உரைக்கு பதிலளித்தார்.
“மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை தேர்தல் பிரச்னையாக பா.ஜ.க மாற்றியுள்ளது, அதேசமயம், சட்டம் தொடர்பான விவாதங்கள், உணர்வுப்பூர்வமான விஷயமாக, முதலில் பங்குதாரர்கள் மற்றும் அது பாதிக்கும் அனைத்து சமூகத்தினருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று ரசூல் கூறினார்.
மேலும், “பொது சிவில் சட்டம் அவசியமில்லை அல்லது அது நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பயனளிக்காது. இந்தியா பல மத, பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட நாடு, அதன் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும். அரசியலமைப்பு மத சுதந்திரத்தை ஒரு அடிப்படை உரிமையாகக் குறிப்பிடுகிறது. முஸ்லிம் தனிநபர் சட்டம் நமது மத சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் பொது சிவில் சட்டம் இந்த உரிமையில் தலையிடுகிறது. இது முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை எதிர்ப்பார்கள். எப்படியானாலும், சிறப்புத் திருமணச் சட்டம், வாரிசுரிமைச் சட்டம் போன்ற வடிவங்களில் ஏற்கனவே நாட்டில் பொது சிவில் சட்டம் உள்ளது - இவை மட்டுமே விருப்பமானவை” என்று ரசூல் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.