ஹரிகிஷன் ஷர்மா
கோவாவில் 155 ஆண்டுகள் பழமையான போர்ச்சுகீசிய காலச் சட்டம் இன்னும் அமலில் உள்ளதைப் போல, தனிநபர் சட்டங்களை மறுஆய்வு செய்து பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையும், விவாதமும் வளர்ந்து வருகிறது. இந்நேரத்தில் "கணிசமான பெரும்பான்மை" மாற்றத்தை நாடினால் மட்டுமே தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் அல்லது புதிய சட்டம் இயற்றப்படும் போது, அத்தகைய சட்டங்களை மறுஆய்வு செய்ய முடியும் என்று சட்ட அமைச்சகம்’ பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
1867 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய சிவில் சட்டம் தொடரும் கோவாவில் கூட, அசல் சட்டம் பல ஆண்டுகளாக மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும், மறுஆய்வு தேவைப்பட்டால், அது கவனிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
2021-22 பதவிக் காலத்தில் தனிநபர் சட்டங்களை மறுஆய்வு செய்யும் விதமாக அரசாங்கம், தனது நிலைப்பாட்டை, பணியாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
பாஜக உறுப்பினர் சுஷில் குமார் மோடி தலைமையிலான குழுவில், 7 மாநிலங்களவை மற்றும் 21 மக்களவை என 28 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மத சமூகங்களுக்கும் பொருந்தும், திருமணம், விவாகரத்து, வாரிசு தொடர்பான பொதுவான குடும்பச் சட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஜூன் 26ஆம் தேதி அந்தக் குழு கோவாவுக்குச் சென்றதாகத் தெரிகிறது.
கோவாவின் தலைமைச் செயலாளர், தற்போதைய மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், குடும்பச் சட்டங்கள் தொடர்பான பொது சிவில் சட்டத்தை பல ஆண்டுகளாக அமல்படுத்திய மாநிலத்தின் அனுபவத்தை குழுவிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் மதம், பாலினம் மற்றும் சாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான சிவில் கோட் கொண்ட ஒரே மாநிலம் கோவா மட்டும்தான். ஒரு முன்னாள் போர்த்துகீசிய காலனியான கோவா, 1867 போர்த்துகீசிய சிவில் கோட் மரபுரிமை பெற்றது. இது 1961 இல் இந்திய யூனியனில் இணைந்த பிறகும் மாநிலத்தில் இன்னும் தொடர்கிறது.
நாட்டின் பிற பகுதிகளில், வெவ்வேறு மத சமூகங்களுக்கு வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் பொருந்தும். உதாரணமாக, இந்து திருமணச் சட்டம், 1955, இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களுக்குப் பொருந்தும், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், 1936 பார்சிகள் தொடர்பான விஷயங்களுக்குப் பொருந்தும். கிறிஸ்தவர்களுக்கான இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், 1872 மற்றும் முஸ்லீம் தனிநபர் சட்டம் (Shariat Application), 1937 ஆகியவை முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட விஷயங்களில் பொருந்தும்.
அரசியலமைப்பின் 44வது பிரிவு - மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளைக் கையாளும் பகுதி IV இல்; "இந்தியாவின் எல்லை முழுவதும் உள்ள குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தை பாதுகாக்க அரசு முயற்சிக்கும்." என்று கூறுகிறது.
ஒரே மாதிரியான சிவில் சட்டம் விவகாரம் நீண்ட காலமாக அரசியல் விவாதங்கள் மற்றும் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது மற்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு மட்டும்
பொது சிவில் சட்டம் (UCC) நீண்ட காலமாக பாஜக வாக்குறுதியாக இருந்து வருகிறது. குடும்பம் மற்றும் வாரிசு சட்டங்கள் மத்திய மற்றும் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் வருவதால், மாநில அரசு ஒரு மாநில சட்டத்தை கொண்டு வர முடியும். ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் நாடாளுமன்றத்தால் மட்டுமே இயற்றப்படும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநிலத்திற்கு பொது சிவில் சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே, புஷ்கர் தாமி அரசாங்கம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழு தனது முதல் கூட்டத்தை இந்த மாதம் நடத்தியது.
நாடாளுமன்றக் குழுவில் உள்ள 28 உறுப்பினர்கள், பாஜக (11), காங்கிரஸ் (4), டிஎம்சி (3), திமுக, டிஆர்எஸ் மற்றும் சிவசேனா (தலா 2), மற்றும் பிஎஸ்பி, எல்ஜேஎஸ்பி, டிடிபி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி (தலா 1) ஆகிய 10 கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரா, அசாம், பீகார், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ, குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.