ராஜஸ்தானில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளும் சீருடை அணிய வேண்டும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், பள்ளி படிப்பு முடிந்த பிறகும் மாணவ, மாணவிகள் மீண்டும் சீருடை அணியும் நிலையில் உள்ளனர். அச்சீருடை என்ன நிறம், எம்மாதிரியான உடையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை அனுப்புமாறு, அனைத்து கல்லூரிகளுக்கும் அம்மாநில கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அனைத்து துறைகளிலும் காவிமயமாக்கி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ”ராஜஸ்தான் அரசு ஆர்.எஸ்.எஸ். அறிவுரையின் கீழ் செயல்பட்டு வருகிறது. முதலில் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றினர். பின்பு, பள்ளி மாணவர்களின் உடையை காவி மயமாக்கினர். இப்போது, எல்லாவற்றையும் காவி மயமாக்க முடிவெடுத்துவிட்டனர். அனைவரையும் அவர்கள் பாபாவாக்கி விடுவார்கள்”, என, அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தேவ் சிங் குற்றம்சாட்டினார்.
”மாணவர்கள்தான் சீருடை வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதனால், கல்லூரி செல்லும் மாணவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்தறிய முடியும். குறிப்பிட்ட நிறத்தில்தான் சீருடை அணிய வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. மாணவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும்”, என ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி தெரிவித்தார்.
கல்லூரிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டீஷர்ட், ஜீன்ஸ் அணிவதற்கு மாணவர்கள் கல்லூரிக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரிகளிடமிருந்து சீருடைக்கான பரிந்துரைகள் வந்தபின்பு, அடுத்த கல்வியாண்டு முதலே சீருடை கட்டாயமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.