விவசாய உபகரணங்களுக்கு உள்ளீட்டு வரிக்கடன் அல்லது ஜிஎஸ்டி நீக்கம், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, மனிதவளத்திற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 'ரோபோ வரி', பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிப்பு, பசுக்கள் மீதான ஆராய்ச்சியை மையமாக வைத்து மத்திய வேளாண் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கீடு.
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (SJM) மற்றும் பாரதிய கிசான் சங்கம் (BKS) போன்ற ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளால் 2024-25 பட்ஜெட்டுக்காக மத்திய அரசுக்கு அளித்த சில பரிந்துரைகள் இவை. இது ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதை முன்னிட்டு, அரசு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இதுபோன்ற ஒரு சந்திப்பு நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரதிய கிசான் சங்கம் தனது பரிந்துரைகளில், மற்ற உற்பத்தியாளர்களைப் போல விவசாயிகள் ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரிக் கடன் பெற வேண்டும் அல்லது விவசாய உபகரணங்களான டிராக்டர்கள் போன்றவற்றை வரியற்றதாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள். பயிர்களை உற்பத்தி செய்ய அவர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான உள்ளீடுகளுக்கு ஜிஎஸ்டி கீழ் அதிக வரி விதிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உள்ளீட்டு வரிக் கடன் கிடைக்கவில்லை, எனவே, விவசாயிகளுக்கு உள்ளீட்டு வரிக் கடன் பெற சில ஏற்பாடுகள் இருக்க வேண்டும், அல்லது அனைத்து விவசாய உள்ளீடுகள் மற்றும் கருவிகள் ஜிஎஸ்டி இல்லாததாக மாற்றப்பட வேண்டும், என்று பாரதிய கிசான் சங்கம் பொதுச் செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
உரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான மானியங்கள் விவசாயிகளுக்கு நேரடி பலன் பரிமாற்றம் மூலம் வழங்கப்பட வேண்டும், நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது என்றும் பாரதிய கிசான் சங்கம் கோரியுள்ளது.
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (SJM) பரிந்துரைகளில் நிறுவனங்கள் உருவாக்கும் வேலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேறுபட்ட வரி மற்றும் ஆட்டோமேஷன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு 'ரோபோ வரி' விதித்தல் ஆகியவை அடங்கும்.
”வேலையின்மை ஒரு பிரச்சினை. செயற்கை நுண்ணறிவு (AI) வருகையால் மக்கள் வேலை இழக்கின்றனர். பிபிஓ, சாஃப்ட்வேர் மற்றும் ஊடகங்களில் வேலை இழப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் ரோபோ வரி பற்றி பேசப்படுகிறது. நிதி அமைச்சருடனான கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை வந்தது. மனிதவளத்திற்குப் பதிலாக AI ஐப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வரி விதிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிடைக்கும் வருவாயை, திறமையான நபர்களுக்கு பயன்படுத்தலாம்.
நீங்கள் உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் ஒரு வரைபடத்தை தயார் செய்ய வேண்டும்,”என்று சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன் கூறினார்.
வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் அடிப்படையில் வரி விதிக்க வேண்டும். இன்று, 100 கோடி சம்பாதித்து 10 பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனமும், 10 கோடி சம்பாதித்து 200 பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனமும் ஒரே வரியை (சதவீத அடிப்படையில்) செலுத்த வேண்டும். வேலைக்கும் வரிக்கும் இடையிலான விகிதத்தை நாம் வைத்திருக்க முடியுமா? என்று அஷ்வனி மகாஜன் கேள்வி எழுப்பினார்.
உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive) திட்டத்தை இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் பரிந்துரைத்துள்ளது.
விவசாயிகளுக்கான இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், கிசான் சம்மன் நிதிக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பாரதிய கிசான் சங்கம் அதன் பரிந்துரைகளில் கூறியுள்ளது.
உள்நாட்டு மாடு, ஆடு போன்றவற்றின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு போதுமான பட்ஜெட்… மேலும் பசுவை அடிப்படையாகக் கொண்ட மத்திய வேளாண் பல்கலைக்கழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படாத வகையில், வேளாண் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு பட்ஜெட்டில் போதுமான ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், என்று மிஸ்ரா கூறினார்.
Read in English: RSS groups’ Budget demands: ‘Robot tax’ for AI use, tax-free agri equipment, cow university
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“