மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், சில எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் போன்ற பிரச்னைகளை போதுமான அளவு தீர்க்க மத்திய அரசு தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை புதன்கிழமை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த ஆண்டு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மூலதன முதலீட்டு செலவும் 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருக்கும்.
வரி குறைப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார். “நான் குறைந்த வரி விதிப்பில் நம்பிக்கை கொண்டவன். எனவே, எந்தவொரு வரிக் குறைப்பும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், மக்களின் கைகளில் அதிக பணத்தை வழங்குவது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சிறந்த வழி” என்று கார்த்தி சிதம்பரம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2023-24 யூனியன் பட்ஜெட்டில் "சில நல்ல விஷயங்கள்" இருப்பதாகக் குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் சசி தரூர், கிராமப்புற ஏழைகள், வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிட்டார். “சில அடிப்படையான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க வேண்டும்” என்று சசி தரூர் கூறினார்.
“மத்திய பட்ஜெட் 2023-ல் சில நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA), கிராமப்புற ஏழை தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சில அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது.” என்று சசி தரூர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே சுரேஷ் கூறுகயில், இது அதானி, அம்பானி மற்றும் குஜராத்தின் நலனை மட்டுமே குறிக்கும் கார்ப்பரேட் சார்பு பட்ஜெட் என்று கூறினார். “இது கார்ப்பரேட் சார்பு பட்ஜெட். அதானியின் அனைத்து நலன்களும் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், சாமானியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்” என்று காங்கிரஸ் தலைவர் கே. சுரேஷ் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த பட்ஜெட்டை, “நடுத்தர மக்களுக்கான் அதிரடி சளுகை பட்ஜெட்” என்று அழைத்தார். இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் ஏதாவது இருக்கிறது என்று கூறினார். “இது ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்கான அதிரடி சலுகை பட்ஜெட். ஆனால், பிரதமர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி பேசினார். இது அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட் இது. எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி, பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு சலுகைகள் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, கடந்த 8-9 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். “வரிகள் அதிகரித்துள்ளன. நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு பணம் செலவிடப்படவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார். சில பெரு முதலாளிகளுக்காகவும் பெரிய தொழிலதிபர்களுக்காகவும் வரி வசூலிக்கப்படுகிறது.” என்று மெஹ்பூபா முப்தி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய பட்ஜெட் முற்றிலும் சந்தர்ப்பவாதமும் மக்கள் விரோதமும் நிறைந்தது என்று கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. “ஏழைகள் மேலும் ஏழைகளாக்படுவார்கள். அதே சமயம் ஒரு வகுப்பினர் மட்டுமே இந்த பட்ஜெட்டில் பயனடைவார்கள்” என்று பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், கட்சிக்கான பட்ஜெட்டைவிட நாட்டுக்கான பட்ஜெட்டாக இருந்தால் நல்லது. மாயாவதி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “திட்டங்களின் பயனாளிகளின் புள்ளிவிவரங்களைப் பற்றி மத்திய அரசு பேசும் போது, இந்தியா சுமார் 130 கோடி ஏழைகள், தொழிலாளர்கள், பின்தங்கிய, விவசாயிகள் தங்கள் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு பெரிய நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக வித்தியாசம் இல்லை. உண்மையில் 100 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வு முன்பு இருந்ததைப் போலவே ஆபத்தில் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மீண்டும் புதிய வாக்குறுதிகளை அளிக்கிற அரசாங்கம் எதுவும் இல்லை. மக்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். ஆனால், ஏன் தவறான நம்பிக்கை அளிக்கிறீர்கள்? ” என்று மாயாவதி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.