இந்திய அரசைக் (Government of India) குறிப்பிட 'யூனியன் கவர்மெண்ட்' (Union government) எனப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஆனால் அது தமிழில் 'ஒன்றிய அரசு' ( ondriya arasu) என மொழிபெயர்த்து பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில், இந்தியக் குடிமைப் பணிகள் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற 150 மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதிலளித்தார். 'ஒன்றியம்' என்ற சொல் துணை மாவட்டம், துணைப் பிரிவு அளவிலான கட்டமைப்பையே குறிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும், அது யூனியன் அரசாங்கத்தை குறைத்து கூற மற்றும் அவமரியாதை செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் "மத்திய அரசு" மற்றும் "யூனியன் அரசு" சர்ச்சைகள் குறித்து மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் பதிலளித்தார். அப்போது, "யூனியன் அரசாங்கம்" என்ற வார்த்தையை தாமே அடிக்கடி பயன்படுத்துவதாகவும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் இங்கு "ஒன்றிய அரசு" என்ற சொல் அரசியல் ஆக்கப்படுவதே பிரச்சனை. மத்திய அரசின் முக்கியத்துவத்தை குறைத்து விளையாடுவதால்தான் பிரச்சனை என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், நீங்கள் மத்திய அரசின் பக்கமே நிற்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசு உங்களை தேர்வு செய்தது. அதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/