/tamil-ie/media/media_files/uploads/2021/08/Union-Minister-Narayan-Rane.jpg)
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய அமைச்சரும் ராஜ்யசபா உறுப்பினருமான நாராயண் ரானே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் உள்ள மஹத் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை பேசிய மத்திய அமைச்சர் ரானே கூறியதாவது: “சுதந்திரம் வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆனது என்று முதல்வருக்கு தெரியாதது வெட்கக்கேடானது. அவர் தனது உரையின் போது சுதந்திரம் வாங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று எண்ணிக்கையைப் விசாரித்தபோது, நான் அங்கே இருந்திருந்தால், நான் (அவருக்கு) ஒரு அறை கொடுத்திருப்பேன்.” என்று கூறினார்.
ரத்னகிரியில் உள்ள சங்கமேஸ்வரத்தில் காலையில் புறப்பட்ட நாசிக் நகர போலீஸ் குழுவினரால் ராணே கைது செய்யப்பட்டார். அவர் இப்போது நாசிக் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
ரத்னகிரியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
நாஷிக்கில் சைபர் போலீசார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக அமைச்சர் தனது வழக்கறிஞர்கள் மூலம் கைது செய்ய இடைக்கால பாதுகாப்பு கோரியிருந்தார். அவருடைய வழக்கறிஞர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நாசிக்கில் நீதிமன்றத்தை அணுக நேரம் கோரி, முன்ஜாமீன் கோரினர். இந்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. அதே எஃப்.ஐ.ஆர் தொடர்பாக ரானே தாக்கல் செய்த தனித்தனி முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
ரத்னகிரி மாவட்ட நீதிபதி பி.என் பாட்டீல் கூறுகையில், மற்ற அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்த பிறகு ரானே கைது செய்யப்பட்டார் என்று கூறினார்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த பாஜக எம்எல்சி பிரசாத் லாட், “மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் ரத்னகிரி எஸ்பி அவரிடம் நடந்து கொண்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் பிடித்து இழுத்து கைது செய்யப்பட்டபோது அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்… அவர் எந்த பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாங்கள் அஞ்சுகிறோம்.” என்று கூறினார்.
நாராயண் ரானே தனது கருத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவர் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் கைது செய்வது உள்ளிட்ட கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பையும் கோரியிருந்தார்.
ராய்காட்டில் உள்ள மஹத், புனே மற்றும் நாசிக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று எஃப்.ஐ.ஆர்களுக்கும் அவர் எதிர்த்துள்ளார்.
நாராயண் ரானே செவ்வாய்க்கிழமை காலை, அவரது கருத்துக்களைப் நியாயப்படுத்திப் பேசினார். அதன் மூலம் அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறினார். “நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நீங்கள் அதை சரிபார்த்து டிவியில் காட்ட வேண்டும். இல்லையெனில் நான் உங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வேன் (மீடியா). எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும், ஊடகங்கள் எனது ‘உடனடி’ கைது பற்றிய ஊக செய்திகளைக் காட்டுகின்றன. நான் ஒரு சாதாரண சாமானிய மனிதன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா” என்று சிப்லனில் செய்தியாளர்களிடம் ரானே கூறினார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வருக்கு எதிரான ரானேவின் கருத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றமாகக் கருத தகுதியில்லாதது என்று கூறியிருந்தார்.
மேலும், அவர், “முதல்வருக்கு எதிரான ரானேவின் கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்த பாஜகவும் ரானேவுடன் உள்ளது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். அதிகபட்சம், இத்தகைய பண்பற்ற கருத்தை அறிக்கைகள் மூலம் ஆளும் கூட்டணி எதிர்த்திருக்கலாம். எஃப்ஐஆர் பதிவு செய்து கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இருந்ததா? மகாராஷ்டிரா சட்டத்தால் ஆட்சி செய்யப்படுகிறாதா? தலிபானால் ஆட்சி செய்யப்படுகிறதா?” என்று கேள்வி எழுபினார்.
மகாராஷ்டிர மாநில அரசின் நடத்தையையும் அது அப்பட்டமாக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதாகவும் விமர்சித்த ஃபட்னாவிஸ், இந்த நடவடிக்கை மிகவும் துரதிருஷ்டவசமானது என்று கூறினார்.
மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செவ்வாய்க்கிழமை மாநில அரசு, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்திருப்பது அரசின் நெறிமுறைக்கு எதிரானது என்றும், மத்திய அமைச்சருக்கு எதிராக தானாக எப்படி கைது உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.