மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹாட்டா வழியாக சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கல்வீச்சி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நிசித் பிரமானிக். மத்திய உள்துறை இணை அமைச்சராக உள்ள இவர், இன்று தனது தொகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது இவரது பயணத்தை வழி மறித்த சிலர் காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தான் என்று கூறி அவர்கள் மீது பாஜகவினர் கற்களை தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மோதலை தவிர்க்கவும் கூட்டத்தை கலைக்கவும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பிரமாணிக் காயமின்றி தப்பியபோது, அவரது வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த தாக்குதலில் மேலும் சில வாகனங்கள் சேதமடைந்த நிலையில், நிசித் பிரமானிக் எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்நிலையில் இல்லை என்பதை காட்டுகிறது என்று பிரமாணிக் கூறினார். மேலும் காவல்துறையின் உதவியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் எங்களை குறிவைக்கிறார்கள்.
இதில் போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை தடுக்காமல், உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். இன்று எனது வாகனம் தாக்கப்பட்டது. நாளை வேறொருவர் குறிவைக்கப்படலாம். இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எடுத்துரைப்போம் என கூறியுள்ளார்.
மேலும் பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் முர்ஷிதாபாத் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள சாகர்டிகியில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிஎம்சி தொண்டர்கள் தங்களை பார்த்து "திரும்பப் போ" (கோ பேக்) என்று கோஷங்கள் எழுப்பினர். “இதுதான் வங்காளத்தில் டிஎம்சி நிறுவ முயற்சிக்கும் கலாச்சாரம். இதுபோன்ற தாக்குதல்களை திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை மிரட்ட நினைக்கின்றனர். எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மத்திய அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே இங்கு பாதுகாப்பாக உள்ளனர். இந்த வன்முறைக் கலாச்சாரத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூறுகையில், மாநிலத்தின் மீதான மத்திய அரசின் "மாற்றாந்தாய்" அணுகுமுறைக்கு எதிரான "மக்களின் கோபம்" மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அத்துமீறல்கள் என்று கூறியுள்ளர். மேலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அனுப்புவதில்லை. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதில் பாஜக மும்முரமாக உள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை பிஎஸ்எஃப் (BSF) சித்திரவதை செய்து வருகிறது.
இப்பிரச்னைகளால் மத்திய அரசின் மீது மக்கள் கோபமடைந்து போராட்டங்கள் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது கூச் பெஹாரில் சரியாக என்ன நடந்தது என்பதைக் கவனத்தில் எடுத்து அதன்படி செயல்படுவோம். ஆனால் எங்களை குறிவைக்க பாஜகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. முதலில் சிபிஐ எஃப்.ஐ.ஆர்.களில் பெயரிடப்பட்டுள்ள அதன் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டிஎம்சி மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“