உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை டெல்லி நீதிமன்றம் ஏற்கெனவே குற்றவாளி என அறிவிந்த நிலையில் இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தண்டனை விவரத்தை அறிவித்தது.
மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா கூறுகையில், ஒரு பொது சேவகனாக இருந்த குல்தீப் சிங் செங்கர் மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்கள் என்றும் அவர் அந்த நம்பிக்கையை கெடுத்துவிட்டார் என்றும் என்றும் கூறினார். இந்த வழக்கில் சிறுமியின் குடும்பத்திற்கு எதிராக சாத்தியமான அனைத்து மிரட்டல் நடவடிக்கைகளும் தீங்கு விளைவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அது அந்த குடும்பத்திற்கு துன்பத்தை அளித்தது. என்று கூறினார்.
மேலும், நீதிமன்றம் குல்தீப் சிங் செங்கருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சமும் செங்கர் மீது வழக்குத் தொடரும்போது ஏற்பட்ட செலவுகளுக்கு உத்தரப் பிரதேச அரசுக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தண்டனை அறிவித்தபோது குல்தீப் சிங் செங்கர் நீதிமன்ற அறைக்குள் உடைந்து அழுதார். அவரது மகள் அவருடைய கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார்.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் எண்ணத்தை தொடர்ந்து மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் அவர்களுக்கு புதிய அடையாளங்களை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ சட்டத்தின் 5(சி), 6 பிரிவுகளின் கீழ் 2017 ஆம் ஆண்டில் உன்னாவில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்தது. பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தை களங்கமற்ற, உண்மையான மற்றும் உறுதித் தன்மையை நீதிமன்றம் கண்டறிந்தது.
இந்த வழக்கு ஜூன் 4, 2017இல் தொடரப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 17 வயது சிறுமி. உத்தரப்பிரதேசத்தின் பேங்கர்மா தொகுதியில் நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த குல்தீப் சிங் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்குப் பிறகு, சுமார் ஒரு வருடம் கழித்து, ஏப்ரல் 3, 2018 அன்று, அந்த பெண்ணி தந்தை கட்டமைக்கப்பட்ட ஒரு சட்டவிரோத ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சில நாட்களிலேயே, அவர் ஏப்ரல் 9, 2018-இல் நீதிமன்றக் காவலில் இறந்தார்.
இந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 2 பெண்கள் மற்றும் அவரது வழக்கறிஞர் காரில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு லாரி கார் மீது மோதியது. அதில் அந்த பெண்ணின் அவரது உறவினர்கள் 2 பேரும் பலியானார்கள். வழக்கறிஞர் படுகாயம் அடைந்தார்.
உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 1ம் தேதி இந்த பாலியல் வன்கொடுமை வழக்கையும் அதனுடன் தொடர்புடைய நான்கு வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றி 45 நாட்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. நீதிபதி இந்த வழக்கை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தினமும் விசாரித்தார்.
இந்த வழக்கு தொடர்புடைய நான்கு வழக்குகள்: சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தந்தையை கட்டமைத்தது மற்றும் நீதிமன்றக் காவலில் அவர் மரணம் அடைந்தது. விபத்து வழக்கில் சதித்திட்டம், மற்றும் ஜூன் 11, 2017 அன்று உன்னாவில் மேலும் மூன்று பேரைக் கொன்றதாகக் கூறப்படும் தனி வழக்கு ஆகியவை அடங்கும். கூடுப்பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தாமதப்படுத்தியதை நீதிபதி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.