உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவில் 2017 ஆம் ஆண்டு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் டிசம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120பி (கிரிமினல் சதி, 363 (கடத்தல்), 366 (திருமணத்திற்கு கட்டாயப்படுத்த ஒரு பெண்ணைக் கடத்துதல் அல்லது தூண்டுதல்), 376 (பாலியல் பலாத்காரம்), மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் அவர் மீது குற்றத்தை அறிவித்துள்ளது.
அந்தச் சிறுமிக்கு இப்போது19 வயது ஆகிறது. அந்தப் பெண் 2017 ஆம் ஆண்டில் குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது புகார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யாவிட்டால், லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு முன்னால் தீக்குளிப்பதாக சிறுமி கூறியதைத் தொடர்ந்து சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் பேங்கர்மா தொகுதியில் நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கர் 2019 ஆகஸ்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இருப்பினும், இந்த வழக்கில் இணை குற்றம் சாட்டப்பட்டவர் சஷி சிங் விடுவிக்கப்பட்டார். தண்டனையின் அளவு டிசம்பர் 18 அன்று முடிவு செய்யப்படும்.
இந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கார் மீது லாரி மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அந்த பெண்ணின் உறவினர்களான இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இதில் அவருடைய குடும்பத்தினர் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் அறிக்கையை பதிவு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு நீதிமன்றமும் நடைபெற்றது.
அவரது தந்தை ஒரு சட்டவிரோத ஆயுத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஏப்ரல் 3, 2018 அன்று கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 9 ஆம் தேதி அவர் நீதிமன்றக் காவலில் இறந்தார். கொலை வழக்கில் எம்.எல்.ஏ, அவரது சகோதரர் அதுல் மற்றும் 9 பேருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளை உறுதிசெய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் செங்கரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறினார். பின்னர், இந்த வழக்கு உத்தரப் பிரதேசத்துக்கு வெளியே மாற்றப்பட்டது.
இந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையின்போது வீடியோ பதிவு செய்யப்பட்டது. பதின்மூன்று அரசுத்தரப்பு சாட்சிகளும் மற்றும் ஒன்பது எதிர்தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவரின் தாயும் மாமாவும் இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்தனர். இருப்பினும், இந்த வழக்கில், குல்தீப் செங்கருடன் குற்றம் சாட்டப்பட்ட சஷி சிங் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.