உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் பாலியல் வல்லுறவை நியாயம் கேட்டு போராடியதற்காக ஐந்து ஆண்களால் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த கொடுமையைக் கண்டித்து சனிக்கிழமையன்று உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த ஐந்து ஆண்களில் இருவர் பாலியல் வல்லுறவு வழக்கிலும் தொடர்பு உடையவர்கள். ஹைதராபாத் என்கவுண்டர் போல இந்த ஐந்து பேரும் சுட்டக் கொள்ளப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை நீதி கோரியிருக்கிறார்.
அவரின் தந்தை கூறுகையில் "ஹைதராபாத்தில் நடந்ததைப் போலவே எனது மகளின் கொலையாளிகள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும், அவர்களின் மரணத்தையே என்று நான் விரும்புகிறேன் ... அப்போதுதான் எனது மகளின் ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்திவாய்ந்த நபர்கள், சிறைக்கு வெளியே இருந்தால் நாங்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டோம். அவர்கள் என் மகளை கொன்றார்கள், எங்களையும் கொல்ல முடியும். போலிஸ் என்கவுண்டரில் அவர்கள் கொல்லப்பட வேண்டும்,"என்றார்.
அரசு சார்பில் வாழ ஒரு வீடும்,ரூ .25 லட்சம் ரொக்கமும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்… அதை நான் என்ன செய்வேன்? நீங்கள் எனக்கு ஒரு அரண்மனையையோ அல்லது ஒரு முழு காலனியையோ கொடுத்தாலும், அது என் மகளை திரும்ப தரப்போவதில்லை. அவள் போய்விட்டாள், திரும்பி வரமாட்டாள். இந்த கவலையை நாங்கள் தேவைப்படும்போது இந்த அரசாங்கம் காட்டியிருக்க வேண்டும்"என்றார்.
பிரேத பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் உடல் புதுதில்லியில் இருந்து உன்னாவோவில் உள்ள அவரின் கிராமத்திற்கு சாலை வழியாக சனிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்படலாம்.
23 வயதான அந்த பட்டதாரிக்கு , ஏழு உடன்பிறப்புகள். ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் அவருக்கு உண்டு. “அவள் கூர்மையான மனம் கொண்டவள், மிகவும் திறமையானவள். சட்டத்தையும் நீதியையும் தனது வாழ்க்கையோடு பயணிக்க நினைத்தாள். அதனால்தான், பட்டம் பெற்ற உடனேயே, காவல்துறையில் சேர விரும்புவதாக எங்களிடம் கூறினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணிக்கும் விண்ணப்பித்தார். தேர்வு முதலில் ரத்து செய்யப்பட்டது, இரண்டாவது முயற்சியில், லக்னோவிற்கு பஸ் தாமதமானதால், தனது எழுத்துத் தேர்வைத் தவறவிட்டார்,”என்று தந்தை கூறினார்.
" காவல்துறையில் சேருவதை விட ஒரு வழக்கறிஞராக இருப்பது நல்லது என்று முடிவுக்கு வந்த பின்பு, சட்டத்தைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்..... உண்மையிலேயே அவர் மேலும் படிக்க விரும்பினார் ... ஒரு வழக்கறிஞராக ஆகத் தயாராகி வந்தார்," என்றார் அவரின் தந்தை.
"உடல் ரீதியாக எனது மகள் வலிமையானவள் ..... ஒன்று அல்லது இரண்டு நபர்களால் தாக்கப்பட்டிருந்தால், எதிரிகளை ஒரு வழி செய்திருப்பாள் . தீக்காயத்திற்கு உட்பட்ட பிறகும் என் மகளால் 1,500 மீட்டருக்கு மேல் ஓட முடிந்திருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். அந்த அசாதாரண சூழ்நிலையிலும் வழிப்போக்கரிடமிருந்து மொபைல் போனை வாங்கி காவல்துறையினரை அழைக்கும் அளவுக்கு அவளிடம் மனவலிமை இருந்திருக்கிறது" என்றார்.
இந்த வறுமையிலிருந்து எங்களை உயர்த்துவது அவள்தான் என்று நாங்கள் எப்போதும் நினைத்தோம், என்றார் உயிர் இழந்த பெண்ணின் தந்தை .
நேற்று வரை, நாங்கள் ஒரு பல்பு விளக்கோடு வாழ்கையை நடத்தி வந்தோம். வெள்ளிக்கிழமை, உள்ளூர் நிர்வாகம் கம்பிகள் மற்றும் பல்புகளை வழங்கி சென்றது என்றும் கூறினார்.
வியாழக்கிழமை அதிகாலை தீக்குளித்த பின்னர் அந்த பெண் 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளானார். அவர் டெல்லிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
சிவம் திரிவேதி மற்றும் அவரது தந்தை ராம் கிஷோர் திரிவேதி, கிராம பிரதனின் (பஞ்சாயத்து தலைவர் ) மகன் சுபம் திரிவேதி மற்றும் அவரது தந்தை ஹரிசங்கர் திரிவேதி, சுபாமின் குடும்ப நண்பரான உமேஷ் வாஜ்பாய் என குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவம் மற்றும் சுபம் ஆகியோர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு சிவம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இறந்த பெண்ணின் மைத்துனி இது குறித்து கூறுகையில் “நான் அவரை என் மகளாகவே நினைப்பேன். சிவமுடனான அவரது உறவைப் பற்றி நாங்கள் அறிந்தோம், அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை... திருமணம் என்கிற பெயரால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள். நாங்கள் பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு சென்று கேட்ட போது, தாழ்ந்த சாதி மற்றும் பொருளாதார பின்னணியைச் சேர்ந்த ஒரு பெண்ணை எவ்வாறு திருமணம் செய்து கொள்ள முடியும் என்று வினவினார்கள், ”என்று கூறினார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கத் தொடங்கியபோது அதிர்ச்சி தொடங்கியது. சிவம் மற்றும் சுபாமின் குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி வந்து எங்களை அச்சுறுத்துவார்கள். ஒரு காலத்தில், என் மாமனார் அவருக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார் …. தற்போது எல்லாம் மாறி விட்டது.... என்றும் அவர் கூறினார்.