உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், பல்பூர் தொகுதிகளின் தோல்வி, பாஜக.வின் சரிவு ஆரம்பமாகிறதா? என்கிற கேள்வியை எழுப்புகிறது. இந்த அடி பாஜக.வுக்கு பெரும் பின்னடைவு!
உத்தரப்பிரதேசம், இந்தியாவின் பெரிய மாநிலம் என்ற அடிப்படையில் இங்கு நிகழும் அரசியல் மாற்றங்கள் தேசத்தை உற்று நோக்க வைக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் 73-ஐ பாஜக கூட்டணி வாரிச் சுருட்டியது. மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற இந்த வெற்றியே பெரிதும் துணை நின்றது.
உத்தரபிரதேசத்தில் பாஜக தொடர்ந்து வலிமையாக இருந்து வந்ததை கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலும் நிரூபித்தது. அங்கு மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325-ஐ வென்ற பாஜக ஆட்சியைப் பிடித்தது. காவி கட்டிய துறவியான யோகி ஆதித்யநாத் உ.பி.யின் முதல்வர் ஆனார்.
உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டதைத்தான் பாஜக தனது பெரும் சாதனையாக கருதியது. காரணம், அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், உத்தரப்பிரதேசம் கை கொடுத்தாக வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனது செல்வாக்கை உரசிப் பார்த்துக்கொள்ள இன்னொரு வாய்ப்பாக இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைந்தது. இந்த இடைத்தேர்தலுக்கான காரணகர்த்தாவே பாஜக.தான்! கோரக்பூர், பல்பூர் ஆகிய தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் முறையே மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்கு நகர்ந்து விட்டதால் இந்தத் தொகுதிகள் காலியாகின.
பாஜக வேட்பாளராக கோரக்பூரில் உபேந்திரா தத் சுக்லாவும், பல்பூரில் கவுஷ்லேந்திரசிங் படேலும் களம் இறங்கினர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் சமாஜ்வாதி வேட்பாளர்களாக மேற்படி இரு தொகுதிகளிலும் முறையே பிரவின் நிஷாத், நாகேந்திர பிரதாப்சிங் படேல் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வாக்குப்பதிவு நடந்தது.
கோரக்பூரில் இன்று காலையில் வாக்குப் பதிவில் ஆரம்பத்தில் சற்று நேரம் பாஜக கை ஓங்கியது. ஆனால் பின்னர் இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் வெற்றிமுகம் காட்டினர். இறுதியில் புல்பூரில் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வென்றது. கோரக்பூரிலும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வாகை சூடியிருக்கிறது.
கோரக்பூரில் பாஜக.வின் தோல்வி, அந்தக் கட்சியின் செல்வாக்கை அசைத்துப் பார்த்திருக்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 முறை வென்ற தொகுதி இது. அதற்கு முன்பு அவரது குரு யோகி அவைட்யநாத் இரு முறை இங்கு எம்.பி.யாக இருந்திருக்கிறார். 2014 தேர்தலில் யோகி ஆதித்யநாத் இங்கு 3.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். கடந்த ஓராண்டாக இந்தத் தொகுதியில் அவர் சிறப்பு கவனம் எடுத்து பணிகளையும் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியே இந்தத் தொகுதியில் அதீத கவனம் செலுத்தினார் என்பது உண்மை! கோரக்பூரில் 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், உரத் தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டிய மோடி, இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் கொடுத்தார். அவை எடுபடவில்லை என்பதை தேர்தல் உணர்த்துகிறது.
கோரக்பூரில் கடந்த ஆண்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த நிகழ்வு தேசத்தை உலுக்கியது. அதை நினைவுபடுத்தி பிரசாரம் செய்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ‘2022-ல் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், அது குறித்து புதிதாக விசாரிப்போம்’ என்றார். இதெல்லாம் பாரம்பரியா பாஜக.வின் கோட்டையை ஓட்டை போட்டுவிட்டது.
பல்பூர் தொகுதியைப் பொறுத்தவரை, 2014-ல் முதல் முறையாக பாஜக ஜெயித்த தொகுதி! அதுவும், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்! அதையும் இந்தத் தேர்தலில் கோட்டை விட்டிருக்கிறது. காங்கிரஸுக்கு இங்கு ஒரு பாரம்பரியம் உண்டு. ஜவஹர்லால் நேரு வென்ற தொகுதி இது! ஆனால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் எழுச்சியால் இங்கு காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. கோரக்பூர், பல்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் டெப்பாசிட் இழந்திருக்கிறது.
‘சமாஜ்வாதி கட்சிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் இந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என இந்த இரு தொகுதிகளின் தோல்விகள் குறித்து பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். ‘தோல்வி குறித்து ஆய்வு செய்வோம்’ என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
இந்தியா முழுவதும் இருந்து மம்தா பானர்ஜி, உமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் அகிலேஷ் யாதவுக்கும், மாயாவதிக்கும் வாழ்த்து தெரிவித்தபடி இருக்கிறார்கள். ‘உ.பி.யில் அகிலேஷும், மாயாவதியும் இணைந்தால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக.வை அசைத்துவிட முடியும்’ என்பதை இந்தத் தேர்தல் உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் ஒத்துழைப்பு கொடுத்தது போல, பொதுத்தேர்தலில் அது சாத்தியமா? பாஜக அடுத்து என்ன விதமான அரசியல் ஆட்டத்தை இங்கு ஆடப் போகிறது? என்பவை இனிதான் தெரியும். அதைப் பொறுத்தே எதிர்கால வெற்றிகளை கணிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.