உ.பி.யில் பிஜேபி அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவை சகாக்களிடம், பதவியேற்ற 3 மாதங்களுக்குள் அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு, செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார். மேலும் பொது மக்கள் அணுகக்கூடிய ஆன்லைன் போர்ட்டலில் விவரங்களை வெளியிடவும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள்’ அரசின் செயல்பாடுகளில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலில், மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் செய்து, மக்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சரவைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
பொதுமக்களுடன் நேரடி உரையாடலுக்காக "ஜல் சௌபல்ஸ்" நடத்தவும், தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சமூக விருந்துகளை ஏற்பாடு செய்யவும் அமைச்சரவையிடம் கேட்கப்பட்டது.
மேலும், அரசு ஊழியர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை அறிவிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
உ.பி.யில் உள்ள அமைச்சர்கள் தங்கள் சொத்துக்களை, குறிப்பாக அனைவரும் அணுகக்கூடிய ஆன்லைன் போர்ட்டலில் தெரிவிக்குமாறு உத்தரவிடப்படுவது இதுவே முதல் முறை. 2017 ஆம் ஆண்டில், ஆதித்யநாத் தனது அமைச்சரவைக்கு 15 நாட்களுக்குள் சொத்துக்களை அறிவிக்குமாறு உத்தரவிட்டார், ஆனால் அப்போது ஆன்லைனில் வெளியிட எந்த குறிப்பிட்ட அறிவுறுத்தலும் இல்லை.
செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர், “ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மக்கள் பிரதிநிதிகளின் நடத்தையில் புனிதம் அவசியம்”.
அதே உணர்வில், அனைத்து அமைச்சர்களும் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அறிவிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடத்தை விதிகளை அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும். நம் நடத்தை மூலம் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ஐஏஎஸ், பிசிஎஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு, அவற்றை ஆன்லைனில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
செவ்வாய்க் கிழமை கூட்டத்திற்கு முன்னதாக, அனைத்து முக்கிய அரசு துறைகளும் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் விளக்கமளித்தன. திட்டங்களை செயல்படுத்துவதில் மூத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுமாறு அமைச்சர்களை ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.
அடுத்த சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சரவை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் முதல்வர் கூறினார். “சர்கார் ஜந்தா கே துவார் (மக்கள் வீட்டு வாசலில் அரசு)” என்ற திட்டத்தின் கீழ், 18 பிரிவுகளில் சுற்றுப்பயணம் செய்ய 18 அமைச்சர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், அமைப்புகள் மற்றும் "விசார் பரிவார்" உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்களின் எதிர்பார்ப்புகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளைப் புரிந்துகொள்வார்கள். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவர்கள் அரசு விருந்தினர் மாளிகைகளில் மட்டுமே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துரையாடுவதற்காக’ ஒவ்வொரு குழுவும் சுற்றுப்பயண அறிக்கைகளை முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உருவாக்கப்பட்ட 18 குழுக்களில், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரிஜேஷ் பதக் ஆகியோர் முறையே ஆக்ரா மற்றும் வாரணாசிக்கு அணிகளை வழிநடத்துவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“