scorecardresearch

வெளியேறும் முக்கிய தலைவர்கள்; பாஜகவின் ஓ.பி.சி வாக்குகளைக் குறைக்குமா? டெல்லி கூட்டத்தில் மறுபரிசீலனை

பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக எழுந்துள்ள சமாஜ்வாதி கட்சி, பாஜகவைச் சேர்ந்த மௌரியாவை சமாஜ்வாதி கட்சியில் சேர்ப்பதன் மூலம் யாதவ் அல்லாத ஓ.பி.சி. பிரிவினரை முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கியில் சேர்க்கும் முயற்சிக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறது.

வெளியேறும் முக்கிய தலைவர்கள்; பாஜகவின் ஓ.பி.சி வாக்குகளைக் குறைக்குமா? டெல்லி கூட்டத்தில் மறுபரிசீலனை

பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக எழுந்துள்ள சமாஜ்வாதி கட்சி, பாஜகவைச் சேர்ந்த மௌரியாவை சமாஜ்வாதி கட்சியில் சேர்ப்பதன் மூலம் யாதவ் அல்லாத ஓ.பி.சி. பிரிவினரை முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கியில் சேர்க்கும் முயற்சிக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறது.

பாஜகவில் நீண்ட காலமாக இருந்த ஓபிசி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறியது, டெல்லியில் உத்தரபிரதேச தேர்தல் குறித்து கட்சியின் உயர்மட்ட தலைமை நடத்திய கூட்டத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. மௌரியாவின் முடிவு, யோகி ஆதித்யநாத் அரசு மேல் சாதிக்கு ஆதரவான ஆட்சி என்று எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு உதவக்கூடும். இந்த பிரச்சாரம் ஓ.பி.சி வாக்குகளைக் கவரும் பாஜகவின் முயற்சிகளை பின்னுக்குத் தள்ளும் என்று கருதப்படுகிறது.

தேர்தல் வியூகம் மற்றும் வேட்பாளர் பெயர்கள் குறித்து விவாதிக்க டெல்லியில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, பாஜக மாநில தலைவர் சுதந்திர தேவ் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் மட்டுமில்லாமல் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும், பாஜகவில் இருந்து மௌரியா வெளியேறிய செய்தி அனைத்து திட்டங்களையும் சீர்குலைத்தது. அவரைப் பின்தொடந்து சில பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேறக்கூடும் என்று ஊகங்கள் எழுந்தன; அப்படி 15 பேர் வெளியேறுவார்கள் என மௌரியா கூறினார்.

எனவே, முதல் மூன்று கட்டங்களில் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு அல்லது மூன்று பெயர்களை பாஜக தேர்வு செய்து வைத்திருந்தாலும், ஒருபுதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிய பட்டியலை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் சுனில் பன்சால், உ.பி. தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளர் அனுராக் தாக்கூர், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜே பி நட்டா மற்றும் உ.பி.யின் பொறுப்பாளர் ராதா மோகன் சிங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் கலந்துகொள்ள முடியவில்லை.

பாஜகவில் இருந்து மௌரியாவின் வெளியேற்றம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஓபிசி சமூகங்களுக்கு சொல்லும் செய்தியாகக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான தனது பிரச்சாரத்தை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இதுவரை பிரதமர் நரேந்திர மோடியும், ஆதித்யநாத்தும் பிரச்சார முகங்களாக இருந்தனர்.

உ.பி. தேர்தலுக்கு முன், அமைச்சராக பாஜகவில் இருந்து விலகிய மிக செல்வாக்கு மிக்க தலைவர் மௌரியா 2016-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அந்த கட்சியில் அவர் மாயாவதிக்கு அடுத்து 2ம் இடத்தில் இருந்தார். அவருடைய நடவடிக்கையை குறைத்து மதிப்பிடும் பாஜக தலைவர்கள், மௌரியா நீண்ட காலமாக முட்டுக்கட்டை போடுபவர் என்றும், அவருடைய மகன் உட்கிறிஸ்ட்டுக்கு சீட் வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கட்சி நிராகரித்ததால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாகவும் கூறினர். பதாவுன் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பியான அவரது மகள் சங்கமித்ரா மௌரியா, கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகி, ஓபிசி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆதரித்தார்.

“பாஜகவில் இருந்து மௌரியா வெளியேறியது அதிர்ச்சியளிக்கவில்லை. ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்த செய்தி ஒரு நாள் பரபரப்புதான். அதன் பிறகு காணாமல் போய்விடும்.”என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ உட்பட பாஜக தலைவர்கள், மௌரியாவின் வெளியேற்றம் ஒரு தீவிரமான கருத்தியல் பிரச்சினையை உருவாக்குகிறது என்று ஒப்புக்கொண்டனர். கட்சியும் அரசும் ஓ.பி.சி பிரிவினருக்கு உரிய பங்கை வழங்கவில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டியுள்ளனர். 2014ம் ஆண்டு மத்தியில் மோடியின் அமோக வெற்றியில் ஓபிசிக்கள் முக்கியப் பங்காற்றினாலும், பாஜக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது. பின்னர் அவற்றைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.

இதற்கு முன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு உயர்மட்டத் தலைவரான ஏக்நாத் காட்சே 2020ல் பாஜகவில் இருந்து வெளியேறினார். இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 அமைச்சர்களை இணைத்து பாஜக ஓபிசி பிரிவினருக்கு ஒரு பெரிய செய்தியை சொல்லியது.

2017 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு துணை முதல்வர் பதவிகளில் ஒன்றைத் தர வேண்டும் என்ற எனக் கூறிவரும் பாஜகவின் மூத்த ஓபிசி தலைவரான கேசவ் பிரசாத் மௌரியாவின் பக்கம் இப்போது உ.பி.யில் அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. இவர்தான் தேர்தலில் பாஜகவை வழிநடத்தினார். கேசவ் பிரசாத் தனது அதிருப்தியை சுட்டிக்காட்டி பல பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்ற பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று வலியுறுத்தினார். உ.பி பாஜக பிரச்சாரத்தின் முகமாக ஆதித்யநாத் இருந்ததை மோடியும் அமித்ஷாவும் தெளிவுபடுத்திய போதிலும் இப்படி கருத்துகள் வெளிப்பட்டு வருகிறது.

பாஜக மௌரியாவின் வெளியேற்றம் குறித்து செவ்வாய்க்கிழமை மௌனம் காத்தபோதும், கேசவ் பிரசாத் பொது வேண்டுகோள் ஒன்றை ட்வீட் செய்தார்: “மரியாதைக்குரிய சுவாமி பிரசாத் மௌரியாஜி ஏன் விலகினார் என்று எனக்குத் தெரியவில்லை. அவசர முடிவுகள் தவறாக நிரூபணமாகலாம் என்பதால், உட்கார்ந்து பேசும்படி நான் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இருப்பினும், இரு மௌரியா தலைவர்களுக்கிடையில் விவகாரங்கள் சுமூகமாக இல்லை. கேசவ் பிரசாத் மௌரியா இருக்கும் வரை பி.எஸ்.பி-யில் தனக்கு இருந்த அதே மதிப்பை தன்னால் ஒருபோதும் பெற முடியாது என்று சுவாமி பிரசாத் அறிந்திருந்தார். பாஜகவில் அவர் ஒருபோதும் உயர்மட்ட ஓபிசி தலைவராக இருக்க முடியாது என்றாலும், சமாஜ்வாதி கட்சியில் யாதவ் அல்லாத ஓபிசி தலைவராக அவர் இருக்க முடியும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

பாஜகவுக்கான அழுத்தம் முதலில் அப்னா தளம் (சோனிலால்) போன்ற கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வரக்கூடும். அக்கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவை கோருகிறது. அவர்கள் தங்கள் ஆதாயத்தை வலியுறுத்த முற்படுவார்கள் என்று ஒரு மூத்த தலைவர் கூறினார்.

இது ஓபிசிக்களுக்கு சொல்லும் செய்தி மட்டுமில்லாமல், மௌரியாவின் வெளியேற்றம் ஆதித்யநாத் முதல்வராக செயல்படுவதை மீண்டும் கவனத்தில் கொள்கிறது என்று உ.பி.யைச் சேர்ந்த பாஜக எம்.பி. கூறினார். “சிலர் யோகி ஆதித்யநாத்தை சில காரணங்களுக்காக எதிர் துருவ அரசியல் இமேஜ் என்று அழைக்கிறார்கள். ஆனால், பாஜகவிற்குள், அவர் மிகவும் முக்கியமான நபராகவும் இருக்கிறார். கட்சி இப்போது ‘யோகிக்கு ஆதரவாக’, ‘யோகிக்கு எதிராக’ என பிளவுபட்டுள்ளது. பாஜக தனது இமேஜ் செல்வாக்குடன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தலைமை விரும்பினாலும், மறுபக்கம் அவருக்கு கீழ் பிரகாசமான எதிர்காலம் இல்லை” என்று அவர் கூறினார்.

மற்றொரு மூத்த பாஜக தலைவரும், எம்.பி.யுமான பெயர் குறிப்பிட விரும்பாத அவர், மௌரியா வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பை கட்சி கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ரேபரேலி, பதாவுன் மற்றும் குஷிநகர் பகுதிகளில் பாஜகவின் குர்மி/மௌரியா ஆதரவு தளத்தில் தாக்கம் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட அவர் மேலும் கூறியதாவது: “கேசவ் பிரசாத் மௌரியாவின் செல்வாக்கு ஆதரவு வாக்குகள் வெளியேறுவதை தடுக்கும். மேலும், அகிலேஷ் மற்ற பகுதிகளில் வாக்குகளைத் திரட்ட முடியாது. ஏனெனில், களத்தில் உயர் சாதியினர் மற்றும் ஓபிசிகளுக்கு இடையே மோதல் இல்லை. மோதல் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித்துகளுக்கு இடையே உள்ளது. வாக்குப் பரிமாற்றம் எளிதல்ல. ஓபிசிக்களிடையேகூட, பெரிய பின்தங்கிய உணர்வு இல்லை, அது சிறிய குழுக்களாக உடைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பங்கை விரும்புகிறார்கள்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Up election obc vote bjp samajwadi party