உத்தரபிரதேச மாநிலம் பரேலியில், பிறந்து சில நாட்களே ஆன பெண் பச்சிளங்குழந்தை பானையில் வைத்து புதைக்கப்பட்ட சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஹிதேஷ் குமார் சிரோஹி. இவரது மனைவிக்கு பிரசவ காலம் என்பதால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குறைபிரசவத்திலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டதால், அந்த பிணத்தை புதைப்பதற்காக, அருகிலுள்ள நிலத்தில் குழி தோண்டினார்.
அப்போது ஒரு மண்பானை தட்டுப்பட்டது. 3 அடி ஆழத்தில், அந்த மண்பானை புதைக்கப்பட்டிருந்தது. அந்த மண்பானையை வெளியே எடுத்து பார்த்ததில், அதில் உயிருடன் பெண் பச்சிளங்குழந்தை இருப்பதை பார்த்து திடுக்கிட்டார். உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
அந்த குழந்தை, மூச்சுவிட சிரமப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு, பொலீஸ் துணை கமிஷனர் அபிநந்தன் சிங் உத்தரவிட்டுள்ளார்.