உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாநில அரசு நடத்தும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, பல
குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிலர் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் காட்சிகள் மனதை உலுக்குகிறது. குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த NICU பிரிவில் இருந்த உபகரணங்கள் தீயில் எரிந்து கருகியது.
ஜான்சி மாவட்ட நீதிபதி அவினாஷ் குமார் கூறுகையில், இரவு 10.30 முதல் 10.45 மணிக்குள் தீ விபத்து ஏற்பட்டதாக NICU ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
NICU இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. stable condition-ல் உள்ள குழந்தைகள் வெளிப்புற பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் உள்ள குழந்தைகள் உள்பக்கத்தில் உள்ள யூனிட்டில் வைக்கப்பட்டிருந்தனர். உள்பக்க யூனிட்டில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
“வெளிப்புற அலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும், உள் பிரிவில் இருந்த 10 குழந்தைகள் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் இன்னும் நடந்து வருகிறது” என்று துணை முதல்வர் கூறினார். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டிஐஜி அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது X பதிவில், "குழந்தைகள் இறப்பு இதயத்தை நொறுக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் ராமரைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“