உத்தரபிரதேச மாநிலத்தில், காதலர் தினத்தில் பசுக்களுக்கு ரொட்டி அளித்து கொண்டாட வேண்டும் என்றும் பசுவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றும் உத்தரபிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 14-ம் தேதி எல்லா நாடுகளில் உள்ள மக்கள் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் காதாலர் தினத்தில், ஆணும், பெண்ணும் வெளியே சென்றால் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் செயலில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்களை கொச்சையாக பேசுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் காதலர் தினத்தில், பசுக்களை அன்பாக அரவணைக்க வேண்டும் என்றும், மாடுகள் அரவணைக்கும் நாளாக கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
இதற்கு எழுந்த கடும் விமர்சனங்களை தொடர்ந்து இந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச விலங்குகள் நலவாரிய அமைச்சர் தரம்பால் சிங், காதலர் தினத்தில் மாட்டின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாடுகளுக்கு ரொட்டி வழங்கி, அதன் ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ பசு என்பது உலகத்தின் தாய் என்று வேதங்கள் கூறுகிறது. இந்த நாளில் பசுவை பாதுகாப்பது தொடர்பாக உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். பசுவில் இருந்து உணவு பொருட்கள் கிடைக்கிறது. இந்து மதத்தில் பசு பற்றி கூறியதால் மட்டும் நாம் பசுவை கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆனால் நமது அடிப்படை தேவையை அது பூர்த்தி செய்கிறது “ என்று தெரிவித்தார்.
இதுபோல ’ஹொலிக தானா’ என்ற கொண்டாடத்தின் போது, மாட்டு சாணத்தை சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் காற்றை சுத்திகரிக்க பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.