யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி தனது பதவிக்காலம் மே 2029 இல் முடிவதற்குள் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இன்று சனிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளன. அவரது ராஜினாமாவுக்கும் "யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) தொடர்பான சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல" என்றும், பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கர் பிரச்சினைக்கு முன்னரே ராஜினாமா செய்து தொடர்பாக அவர் முடிவு எடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“யு.பி.எஸ்.சி தலைவர் பதினைந்து நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். இது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ”என்று முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மனோஜ் சோனி தனது ராஜினாமா கடிதத்தை ஒரு மாதத்திற்கு முன்பே ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்கும் பட்சத்தில் உடனடியாக அவர் பதிவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல கல்வியாளரான மனோஜ் சோனி (59), கடந்த 2017-ல் யு.பி.எஸ்.சி ஆணையத்தில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த ஆண்டு மே 16ம் தேதி அன்று யு.பி.எஸ்.சி தலைவராக பதவியேற்று கொண்டார். அவரது பதவிக்காலம் வரும் மே 15, 2029 ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால் சமீபத்தில், பயிற்சி ஐ.ஏ.எஸ். புஜா கேத்கர் சர்ச்சைக்கு மத்தியில் பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
மனோஜ் சோனி யு.பி.எஸ்.சி. தலைவராவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அவரை விடுவிக்குமாறு கோரியிருப்பதாகவும், ஆனால், அப்போது அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனி இப்போது "சமூக-மத நடவடிக்கைகளுக்கு" அதிக நேரம் ஒதுக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை, தகுதிக்கு அப்பாற்பட்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் முறைகேடாக தனது அடையாளத்தைப் பயன்படுத்துவதற்காக பயிற்சி ஐ.ஏ.எஸ். புஜா கேத்கருக்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்காலத் தேர்வுகளில் இருந்து அவரைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யு.பி.எஸ்.சி அறிவித்ததால் மனோஜ் சோனியின் ராஜினாமா அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
யு.பி.எஸ்.சி-யில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, மனோஜ் சோனி மூன்று முறை துணைவேந்தராக பதவி வகித்துள்ளார். ஆகஸ்ட் 1, 2009 முதல் ஜூலை 31, 2015 வரை, குஜராத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை தொடர்ச்சியாக பணியாற்றினார். ஏப்ரல் 2005 முதல் ஏப்ரல் 2008 வரை பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் (எம்.எஸ்.யு) துணைவேந்தராக ஒரு முறை பதவி வகித்தார். எம்.எஸ்.யு-வில் சேரும் போது, சோனி இந்தியாவில் இதுவரை இல்லாத இளைய துணைவேந்தராக இருந்தார்.
சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற அரசியல் அறிவியலில் சோனி, 1991 மற்றும் 2016 க்கு இடையில் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில், வல்லப் வித்யாநகரில் சர்வதேச உறவுகள் பற்றி கற்பித்தார். சோனி பல அங்கீகாரங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார் மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளியீடுகளைக் கொண்டுள்ளார்.
யு.பி.எஸ்.சி. தலைவர் தலைமையில் உள்ளது மற்றும் அதிகபட்சம் பத்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம். தற்போது, யு.பி.எஸ்.சி-யில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர், அதன் அனுமதிக்கப்பட்ட பலத்தை விட மூன்று பேர் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“