/indian-express-tamil/media/media_files/2025/10/12/modi-gor-2025-10-12-08-31-40.jpg)
அமெரிக்காவின் புதிய தூதர்-நியமனதாரராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சமீபத்திய சுங்க வரி சிக்கல்களுக்கு மத்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அமெரிக்காவின் சார்பில் 50% சுங்க வரிகள் மற்றும் H-1B விசா கட்டண உயர்வு போன்ற சவால்கள் இருக்கும் சூழலில், கோரின் இந்த வருகை இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
கோரின் இந்தப் பயணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் தனிப்பட்ட நட்புறவை வலியுறுத்துவதாகவும், இரு நாடுகளுக்குமிடையே 'விரிவான உலகளாவிய மூலோபாய பங்காளித்துவத்தை' மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, செர்ஜியோ கோர் தனது முதல் வெளிப்படையான முயற்சியாக, அக்டோபர் 9 முதல் 14 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர், கோர் தனது உரையில், "பிரதமர் மோடியுடன் ஒரு நம்பமுடியாத சந்திப்பை முடித்தோம். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். முக்கிய தாதுக்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தோம்," என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை "ஒரு சிறந்த மற்றும் தனிப்பட்ட நண்பராகக்" கருதுகிறார் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கோர், பிரதமர் மோடியை சந்தித்தபோது, அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட, மோடியின் புகைப்படத்தையும் பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பதிவில், "இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்-நியமனதாரர் திரு. செர்ஜியோ கோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மூலோபாய பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியைத் தவிர, கோர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் சந்தித்தார். ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' பதிவில், "இந்தியா-அமெரிக்க உறவு மற்றும் அதன் உலகளாவிய முக்கியத்துவம் குறித்து விவாதித்தோம். அவரது புதிய பொறுப்புக்காக வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டார்.
கடந்த மாதம் செனட் உறுதிப்படுத்தல் விசாரணையின்போது, இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார். இருதரப்பு உறவை, சீனாவின் ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர், "சீனாவின் விரிவாக்கவாதம் குறித்த இந்தியாவின் கவலையைக் கருத்தில் கொண்டு, எனது முதன்மைக் குறிக்கோள் இந்தியாவை எங்களுடைய பக்கம் இழுத்து, அவர்களிடமிருந்து விலகி இருப்பதை உறுதிசெய்வதுதான்," என்று தெரிவித்திருந்தார். தற்போது அமெரிக்கா-சீனா உறவில், அதிபர் டிரம்ப் 100% சுங்க வரி விதிப்பதாக அச்சுறுத்தி வரும் சூழலில், கோரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள 'விரிசல்களைச் சீரமைத்து' 'நம்பிக்கையை' மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இரு தரப்பிற்கும் உள்ளது. இந்த அசாதாரண குறுகியகாலப் பயணம், தூதருக்கான நியமன ஏற்பு இந்திய அரசால் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தின் 'சாதரணமற்ற' செயல்பாடுகளின் புதிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
செர்ஜியோ கோர், அதிபர் டிரம்பிற்கு நெருக்கமானவராகக் கருதப்படுவதால், இந்தத் துரித நடவடிக்கை, நடப்புப் பதட்டங்களுக்கு மத்தியில் இராஜதந்திர உறவை வலுப்படுத்த வாஷிங்டன் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறது. தூதராக முறைப்படி பொறுப்பேற்பதற்கு முன்பு, கோர் வணிகத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். முன்னதாக, அக்டோபர் 8 அன்று பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் தொலைபேசியில் உரையாடி, இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் "நல்ல முன்னேற்றம்" அடைந்திருப்பதை மீளாய்வு செய்தனர். இந்த உயர் மட்ட ஈடுபாடு, நீண்டகாலமாக இழுபறியிலிருந்த வர்த்தகப் பேச்சுக்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்று புதுடெல்லி நம்புகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us