கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கோவிட் மருத்துவ உதவிகளை அறிவித்துள்ள அதிபர் ஜோ பிடன், உதவி செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஜோபிடன் கூர்ந்து கவனித்து வருகிறார். கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கு தங்களால் முடிந்த அளவு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது என சாகி கூறினார்.
இந்தியாவின் COVID-19 நிலைமை குறித்த கேள்விக்கு பதிலளித்த சாகி, இந்த கடினமான நேரத்தில் அமெரிக்கா தனது முக்கியமான கூட்டாளருக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து தொடர்ந்து செயல்படும் என்றார்.
எங்கள் உதவி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவின் ஏழு விமானங்களில் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம்.
இது கொரோனா தொற்றுடன் போராடும் பல நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.
தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்குவோம். இந்தியாவிற்கு நேரடி தேவைகள் என்ன என்பது குறித்து தொடர்பில் இருப்போம். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையை குறைப்பதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கும் என நம்புகிறோம் என சாகி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"