பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதை தடுக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டப்பேரவையில் நேற்று (செப்.23) மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநில குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 438, 1973-இல் திருத்தம் செய்து கடந்த வியாழக்கிழமை மசோதா முன்மொழியப்பட்டது. அதன்படி முன்ஜாமீன் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்தப் பிரிவு வரையறுத்துள்ளது.
மசோதா மீது பேசிய உத்தரப் பிரதேச சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, ''இதன்மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பும் குறையும்'' என்று கூறினார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தவகையில், பாலியல் குற்றங்களில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை உடனடியாக சேகரிப்பதை உறுதி செய்யவும், ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சியங்கள் அழிக்கப்படுவதை தடுக்கவும் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண், சாட்சிகளை அச்சுறுத்துவதிலிருந்து தடுக்கவும் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உ.பி அரசு பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டம், 2020 இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலவரம், ஆர்ப்பாட்டம், போராட்டம், வேலைநிறுத்தம் மற்றும் பந்த் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், இழப்பீடு கோருவதற்கான காலஅவகாசத்தை 3 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது, என்று கன்னா கூறினார். மேலும், இந்த சட்டத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக தொகை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட துறை முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil