Dalit youth burnt alive in Uttar Pradesh: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 22 வயது தலித் இளைஞர் ஒருவர் கட்டிலில் கட்டிவைத்து உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள படைச்சா கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் மோனு குமார் நெற்று இரவு அவரது வீட்டில் உள்ள கட்டிலில் கட்டிவைத்து உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் குறித்து ஹர்தோய் கிழக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கியானஞ்ஜெய் சிங் கூறுகையில் “தலித் இளைஞரான மோனு குமார் அவருடைய வீட்டருகே வசிக்கும் ஷிவானி குப்தா(21) என்ற பிற்படுத்தப்பட்ட சாதி இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண் படைச்சா கிராமத்தில் அவருடைய உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மோனு குமாரின் தாய் ராம்பேட்டிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அவரை மாவட்ட காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதனால், மோனுவின் தந்தை மிதிலேஷ் மோனுவை பணம் எடுத்து வரும்படி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். வீட்டுக்கு வந்த மோனு அந்த பெண்ணை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தினர் மோனு குமாரைப் பிடித்து கட்டிலில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மோனுவின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் மோனு மிகவும் மோசமாக எரிந்த நிலையில் கண்டனர். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் அந்த பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இளைஞர் மோனுவை உயிருடன் கட்டி வைத்து எரித்த கட்டிலை கைப்பற்றினர். இந்த கொலையில் மோனுவுடன் தொடர்பில் இருந்த ஷிவானி குப்தா மற்றும் அவருடைய உறவினர்கள் இருவர் உள்பட மொத்தம் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய கிராமத்தைச் சேர்ந்த சத்யம் சிங் மற்றும் ஷிக்கர் சிங் இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
இந்த கொலையில் தொடர்புடைய 5 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை), 147(கலவரத்தில் ஈடுபடுதல்) 504 (அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்), மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹர்தோயிலுள்ள கோட்வாலி காவல் நிலைய அதிகாரி ஷைலேந்திர சிங் கூறினார்.