உத்தரப் பிரதேச பாஜகவில் இருந்த ஓபிசி தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா, யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த மறுநாள், மற்றொரு உ.பி. கேபினட் அமைச்சர் தாரா சிங் சௌகான், ராஜினாமா செய்து, அகிலேஷ் யாதவை சந்தித்ததையடுத்து பாஜக மீண்டும் அதிர்ச்சி அடைந்தது.
தாரா சிங் சௌகான் பாஜகவின் ஓபிசி மோர்ச்சாவின் முன்னாள் தலைவர். மௌரியாவைப் போலவே இவரும் கடந்த காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) இருந்தவர்தான்.
முசாபர்நகரில் உள்ள மீராபூரில் இருந்து பாஜக எம்எல்ஏவான அவதார் சிங் பதானா, இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் புதன்கிழமை இணைந்தார். பதானா ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்து நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சட்டமன்றத் தேர்தலிலும் பதானா போட்டியிடுவார் என்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், சஹாரன்பூரில் உள்ள பெஹத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ நரேஷ் சைனி மற்றும் ஃபிரோசாபாத்தில் உள்ள சிர்சாகஞ்ச் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ஹரியோம் யாதவ், முன்னாள் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ தரம்பால் யாதவ் ஆகியோர் புதுடெல்லியில் ஆளும் கட்சியில் இணைந்தபோது பாஜக முகாமில் நிம்மதி ஏற்பட்டது.
மாவ் மாவட்டத்தில் உள்ள மதுபன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சௌகான், ஆதித்யநாத் அரசில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சராக இருந்தார்.
சுவாமி பிரசாத் மௌரியா அளித்த ராஜினாமா கடிதத்தைப் போலவே, தாரா சிங் சௌகான் தனது ராஜினாமா கடிதத்தில், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை என்று வருத்தப்படுவதாகவும் கூறினார்.
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, நேற்று முன்தினம், சுவாமி பிரசாத் மௌரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். மேலும், தாரா சிங் சௌகான் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தாரா சிங் சௌகானை தனது மூத்த சகோதரர் என்று அழைத்த கேசவ் பிரசாத் மௌரியா, ட்விட்டர் பதிவில், “குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வழிதவறிச் சென்றால், அது வலிக்கிறது. வெளியேறுபவர்கள் மூழ்கும் கப்பலில் ஏற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அது அவர்களுக்குதான் நஷ்டம்.” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றத்தால் பதற்றமடைந்த பாஜக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் அதன் ஓபிசி மற்றும் பட்டியல் இனத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் சமூகங்களை சென்றடையவும் கட்சி அவர்களின் நலனை விரும்பும் கட்சி என்பதை பரப்பவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமாஜிக் சம்பார்க் பிரச்சாரத்தின் போது பி.எஸ்.பி மற்றும் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர்களை பாஜகவில் சேர வற்புறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக ஓபிசி மோர்ச்சா மாநிலத் தலைவர் நரேந்திர காஷ்யப் கூறுகையில், சமாஜிக் சம்பார்க் பிரச்சாரத்திற்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த பிரச்சாரம் ஜனவரி 14ம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்றும் கூறினார்.
“சமூதாயத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்துடனும் உரையாடுவதற்கான மெகா பிரச்சாரம் இது. இது முறைப்படி ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும். குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே இந்த பிரச்சாரம் தொடங்கிவிட்டது. முன்னதாக, மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் மோர்ச்சாவின் பிரமாண்ட சம்மேளனங்கள் நடத்தப்பட்டன” என்று அவர் கூறினார்.
இதனிடையே, அகிலேஷ் யாதவ், தாரா சிங் சௌகானை சந்தித்த பிறகு, அவரை சமூக நீதி வீரர் என்று அழைத்தார். அவரை சமாஜ்வாதி கட்சிக்கு வரவேற்றார். மேலும், இருவரும் சந்தித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சௌகான் பி.எஸ்.பி.யில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். அவர் இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், அவர் பி.எஸ்.பி.க்குத் திரும்பினார், 2009-ல் கோசி எம்பி ஆனார். மக்களவையில் பிஎஸ்.பி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக ஆனார். 2014ல் மீண்டும் கோசியில் போட்டியிட்டு பாஜகவிடம் தோல்வியடைந்தார்.
தாரா சிங் சௌகான் பி.எஸ்.பி.யில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் 2015ல் பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு, அசம்கரின் பாலிடெக்னிக் மைதானத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் மாபெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்து பாஜக தலைவர் அமித்ஷாவைக் கவர்ந்தார். அந்த கூட்டத்தில் அமித்ஷா முதன்மை விருந்தினராக இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, பாஜகவின் ஓபிசி மோர்ச்சாவின் தேசியத் தலைவராக தாரா சிங் சௌகான் நியமிக்கப்பட்டார்.
பாஜக அவருக்கு 2017-ல் மதுபன் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட சீட் கொடுத்தது. மதுபன் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரை ஆதித்யநாத் அரசாங்கத்தில் அமைச்சராகவும் சேர்த்தது.
“ஆனால், அவர் பாஜக தொண்டர்களுடன் சௌகரியமாக இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி காலத்திலிருந்து தன்னுடன் இருந்தவர்களுடன் அவர் தொடர்பில் இருந்து வந்தார். இதனால், பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அவர் 6 மாதங்களுக்கு முன்பே அரசாங்கத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார். பாஜக்அ தனது ஜன் விஸ்வாஸ் யாத்ராவில் மாவ் மாவட்டத்தில் பயணம் செய்தபோது அவரை ஈடுபடுத்தவில்லை” என்று மாவ் மாவட்டத்தில் உள்ள பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி, தாரா சிங் சௌகான் சமூக வலைதளங்களில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் யாதவ் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் தலைவர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
புதன்கிழமை பாஜகவில் இணைந்த 2 எம்.எல்.ஏ.க்களில், ஹரிஓம் யாதவ் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள சிர்சாகஞ்ச் தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2017-ல் அந்த மாவட்டத்தில் மாவட்டத்தில் மற்ற 4 இடங்களை பாஜக வென்றிருந்தாலும், ஹரிஓம் யாதவ் மட்டுமே சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவராக இருந்தார். இவர் முலாயம் சிங் யாதவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைந்த மற்றொரு எம்.எல்.ஏ நரேஷ் சைனி, ஒரு ஓபிசி தலைவர் ஆவார். 2017ல் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சி கூட்டணியின் வேட்பாளராக அவர் பாஜகவின் மகாவீர் சிங் ராணாவை தோற்கடித்தார்.
இதனிடையே, பாஜகவில் இருந்து வெளியேறிய ஒரு நாள் கழித்து சுவாமி பிரசாத் மௌரியா, பாஜக தன்னை மீண்டும் வர வைக்க முயற்சிப்பதாக வந்த செய்திகளை மறுத்தார்.
மேலும், “ராஜினாமா செய்த பிறகு, இது அர்த்தமற்ற பேச்சு. என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். அரசியல் முடிவுகளில் பின்வாங்கக் கூடாது. ஜனவரி 14ம் தேதி எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவேன்” என்று கூறினார்.
மௌரியா செவ்வாய்க்கிழமை வெளியேறியதைத் தொடர்ந்து, குறைந்தது மூன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் - ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி பிரசாத் சாகர் ஆகியார் மௌரியாவைப் பின் தொடர்வதாகக் கூறினார்கள். பாஜகவில் இருந்து மேலும் பலர் தன்னுடன் இணைவார்கள் என்று மௌரியா குறிப்பிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.