உத்தரப்பிரதேச கான்பூரில் எட்டு போலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் கைது செய்யப்பட்டார். "உஜ்ஜைனில் உள்ள மகாகாளி கோவிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார்" என்பதை மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும் சற்று முன்பு உறுதிபடுத்தினார்.
Madhya Pradesh Home Minister Narottam Mishra on surrender of Vikas Dubey from Mahakal temple in Ujjain. Meanwhile, their UP counter parts maintain a stoic silence. pic.twitter.com/oiUUuuuqAf
— Piyush Rai (@Benarasiyaa) July 9, 2020
துபே மீது கொலை, கொலையைத் தூண்டல், ஆள்கடத்தில் உள்ளிட்ட 60 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று, கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் விகாஸ் துபே பதுங்கியுள்ளார் என்ற தகவலையடுத்து, அங்கு விரைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர மிஸ்ரா உள்பட எட்டு காவல்துறை அதிகாரிகள் துபேயின் ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, விகாஸ் துபேயின் இரண்டு கூட்டாளிகள் இன்று காலை உத்தரபிரேதேச காவல்துறையினர் நடத்திய தனித்தனி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதல் கூட்டாளியான ரன்வீர் (இவரது, தலைக்கு காவல்துறை 50,000 சன்மானம் விதித்திருந்தது) என்கிற பாவா துபே எட்டாவா மாவட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
மற்றொரு கூட்டாளியான பிரபாத் மிஸ்ரா கான்ப்பூர் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற போது உத்தரபிரேதேச சிறப்பு காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, விகாஸ் துபேயின் நான்கு கூட்டாளிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய இரண்டு பெண் உறவினர்கள் உட்பட 6 பேரை, ஹரியானா, கான்பூர் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் நடந்த வெவ்வேறு தேடுதல் வேட்டையில் காவல்துறை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில், சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சபேபூர் முன்னாள் காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி, துணை ஆய்வாளர் கிருஷ்ண குமார் சர்மா ஆகியோரை கான்பூர் போலிஸ் ஏற்கனவே கைது செய்திருந்தது. திவாரி, ஷர்மா இருவரும் பிக்ரு கிராமத்தில் நடக்கப் போகும் காவல்துறை தேடுதல் வேட்டை குறித்து விகாஸ் துபேவிடம் முன்கூட்டியே தெரிவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கான்பூர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.